பக்கம்:இலக்கண வரலாறு.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

நூலோ, தனிப் பாடல்களோ அகப்பட்டில. அவை மறைந்திருக்கக்கூடும்.

பாயிரம்

நம்பியகப் பொருளுக்குச் சிறப்புப் பாயிரங்களாக இரண்டு பாடல்கள் அறியவருகின்றன. ஒன்று எல்லாப் பதிப்புகளிலும் உடைய “பூமலி நாவன்” என்னும் பாட்டு; மற்றொன்று “பூமிசை நடந்த” என்னும் பாட்டு. அதனைக் காட்டுவது அ. குமாரசாமிப் பிள்ளையும் த. கனகசுந்தரம் பிள்ளையும் வெளியிட்ட புத்துரைப் பதிப்பு.

சமயம் - வரலாறு

நம்பியார் சமணசமயம் சார்ந்தவர் என்றும், தொல்காப்பியத்தினையும் சான்றோர் இலக்கியங்களையும் கொண்டு நூல் செய்தவர் என்றும், நூல் செய்ததுடன் உரையும் அவரே எழுதினார் என்றும், புளிங்குடி உய்ய வந்தான் என்னும் முத்தமிழ் ஆசிரியன் மைந்தன் என்றும், வடமொழி தென்மொழியாகிய இருமொழி வல்லவர் என்றும், நாற்கவிராச நம்பி என்னும் பெயரினர் என்றும் அச்சிறப்புப் பாயிரங்களால் அறிய வருகின்றன. இவரூராகிய புளிங்குடி தொண்டைநாட்டதென்றும், நெல்லை நாட்டதென்றும் கூறுவர். பொருநையாற்றின் வட கரையில் உள்ள புளிங்குடியே இவரூர் என்றும் வலியுறுத்துவர்.

காலம்

சிறப்புப் பாயிர உரை விளக்கத்தில், “காலம், பாண்டியன் குலசேகரன் காலம்” என்று வருவது கொண்டு, குலசேகரபாண்டியன் என்பவன் முதல் சடையவர்மன் குலசேகரனே என்றும், அவன் காலம் கி.பி. 1192-1266 ஆதலால், இவர் காலம் 12 ஆம் நூற்றாண்டின் இறுதியும் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியுமாம் என்றும் கொள்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/361&oldid=1474299" இலிருந்து மீள்விக்கப்பட்டது