பக்கம்:இலக்கண வரலாறு.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

317


நூல்

அகத்திணை இயல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழியியல் என ஐந்தியல்களைக் கொண்டது இந்நூல், இவற்றின் நூற்பாக்கள் முறையே 116, 54, 29, 10, 43; ஆக 252.

எனினும் ஒழிபியலில் 43, 42 என இருவகைக் கணக்கீடுகள் அமைந்துள்ளன. அகத்திணையியலில் 117 நூற்பாக்கள் என்றும், ஒழிபியலில் 41 நூற்பாக்கள் என்றும் ஒரு வெண்பாவால் அறிந்து கொள்ள வாய்க்கின்றது. அது,

“அகத்திணை நூற்றுப் பதினேழ் அடங்கா
மிகுந்தகள(வு) ஐம்பதுடன் மேல்நான்(கு)—இகுத்த
வரை(வு) இருபத் தொன்பஃது மன்னுங்கற்(பு) ஈரைந்(து)
உரையொழிபு நாற்பஃதோ(டு) ஒன்று”

என்பது. இவ்வேறுபாடு ஒரு நூற்பாவை இரு நூற்பா ஆக்கல், இரு நூற்பாவை ஒரு நூற்பாவாக்கல் என்பவற்றால் நேரக்கூடுவதே. தொல்காப்பிய நூற்பா எண்ணிக்கையிலும் இச்சிக்கல் உண்மை அறியக் கூடியதே.

நூலியல்

நம்பியார் சில இலக்கணங்களை வரைப்படுத்திச் சொல்கிறார். தொல்காப்பியத்தின் மேல் வளர்ச்சி எனத் தக்கவை அவை. சில இலக்கணங்களில் விகற்பம் காட்டி யமைக்கிறார். அக்கால இயல், புகுந்த வேற்றுக் கொள்கைகள் இவற்றின் சாயலாக அமைபவை அவை.

‘கைக்கிளைக் குறிப்பு’, ‘பெருந்திணைக் குறிப்பு’ எனத் தொல்காப்பியர் கூறுவதை இவர், “கைக்கிளை யுடைய தொருதலைக்காமம்” (3), “பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்” (5) என இலக்கணம் வகுத்துக் காட்டுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/362&oldid=1474300" இலிருந்து மீள்விக்கப்பட்டது