பக்கம்:இலக்கண வரலாறு.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

என்பது. இனிக் காரிகை என்பது எதற்கோ எனின், கட்டளைக் கலித்துறையாம் யாப்பில் அமைந்தமையாலும், காரிகையாகிய மகடூஉ முன்னிலை உடையதாகலானும் என்பது. ஆயின், காரிகை எனவே அமையலாமே எனின் காரிகை எனின் யாப்பருங்கலக் காரிகையையே சுட்டுமாகலின் அதனின் வேறுபடவும் வெளிப்படவும் விளங்குமாறு களவியற் காரிகை எனப்பட வேண்டும் என்பது.

பெயரீடு

அகப்பொருள் இலக்கணமாகிய இச்சிதைவு நூலை முதற்கண் தமிழுலகில் அச்சூர்தி ஏற்றி உலாவரச் செய்த உயர் பெரும் பதிப்பாசிரியர் பேராசிரியர் ச. வையாபுரிப் பிள்ளை சூட்டிய பெயரே இஃதாம். இதன் மூலப்படி குறித்துப் பேராசிரியர் எழுதுகின்றார்:

“இவ்வரிய நூலுக்கு இப்போது கிடைத்துள்ளது ஒரு கையெழுத்துப் பிரதியேயாகும். இது சென்னை அரசாங்கத்தாரது தொன்னூல் நிலையத்திலுள்ளது. இப்பிரதியின் இறுதியில் எழுதப்பெற்றுள்ள ஆங்கிலக் குறிப்பினால் இந்து ஆழ்வார்திருநகரி மலையப்ப பிள்ளைக் கவிராயருக்குரிய ஏட்டுப் பிரதியினின்றும் நாதமுனிப்பிள்ளை என்பார் 12-6-1920 இப்பிரதி செய்ததென அறியக் கிடக்கின்றது” என்கிறார்.

பொருளியல்

அவர் பதிப்பித்த காலத்திற்குப் பின்னர்க் கருவி நூல்கள் சில கிடைத்துள்ளன. குறிப்பாகத் தமிழ்நெறி விளக்கப் பொருளியல் கிடைத்தது. அப்பொருளியல் இக் களவியல் காரிகைக்கு அடிக்கள நூல் போல்வது. அதிலிருந்து மட்டும் 91 மேற்கோள்கள் இந்நூலில் காட்டப்பட்டுள்ளன. பாண்டிக்கோவை தனியே அச்சிடப் பட்டுள்ளது. அதிலிருந்து 154 பாடல்கள் மேற்கோளாக வருகின்றன. இன்ன பிறவெல்லாம் இப்பதிப்புத் திருந்தவும், விடுபாடு நிரப்பவும் உதவின. அவ்வகையில் கழக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/369&oldid=1474306" இலிருந்து மீள்விக்கப்பட்டது