பக்கம்:இலக்கண வரலாறு.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20. பன்னிருபாட்டியல்


‘அளவையால் பெயர் பெற்றது பன்னிருபடலம்’ என்பது பழைய உரை. அவ்வுரை பன்னிரு பாட்டியலுக்கும் பொருந்த வேண்டும்; பெயரைப் பார்க்க அப்படியே தோன்றுகின்றது. பன்னிரண்டு பாட்டியல் நூல்களும் இல்லை. பன்னிரண்டு புலவர்கள் இயற்றிய பாட்டியல் தொகுப்பும் இல்லை. பல பாட்டிலக்கண நூல்களிலிருந்து தொகுத்துக் கோவையாக்கப்பட்ட தொகை நூலாக அது விளங்குகின்றது.

பாட்டியற் புலவர்கள்
பாட்டியற் புலவர்கள் பதினைவர் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அகத்தியர், அவிநயனார், இந்திரகாளியார், கபிலர், கல்லாடர், கோவூர் கிழார், சீத்தலையார், செயிற்றியனார், சேந்தம் பூதனார், நற்றத்தனார், பரணர், பல்காயனார், பெருங்குன்றூர் கிழார், பொய்கையார், மாபூதனார் என்பார் அவர்.

பெயர்
இனி இதனைப் பன்னிரு பொருத்தங்கள் பேசப் படுதலால் (எழுத்தும் பாட்டியலில் பொருத்தமே) இதற்குப் பன்னிரு பாட்டியல் என்று பெயர் இருக்கலாம் என்பர். அவ்வாறாயின் பன்னிரு பொருத்தப் பாட்டியல் என்றே இருந்திருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/373&oldid=1474311" இலிருந்து மீள்விக்கப்பட்டது