பக்கம்:இலக்கண வரலாறு.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



23. சிதம்பரப் பாட்டியல்


ஆசிரியர்

பரஞ்சோதியார் என்பவரால் இயற்றப்பட்டது இப்பாட்டியல் நூல். திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவரின் இவர் வேறொருவர். இவர் சிதம்பரபுராணம், மதுரையுலா என்பவற்றை இயற்றிய புராணத் திருமலை நாதர் என்பாரின் மைந்தர்.

“சிதம்பரப் பாட்டியலைச் செய்தான் தமிழால்
சிதம்பரபு ராணமுதல் செய்து—விதம்பெறுசீர்
சேர்ந்த புராணத் திருமலைநா தன்தவத்தால்
சார்ந்தபரஞ் சோதியென்பான் தான்”

என்னும் இந்நூற் பாயிரத்தால் இச்செய்திகள் விளங்கும்.

நூல்

சிதம்பரப் பாட்டியல், உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல், பொருத்தவியல், மரபியல் என ஐந்தியல்களையுடையது. இவற்றைப் பற்றிய மொத்தப் பாடல்கள் 47. இப்பாடல்கள் எல்லாம் எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தங்கள்.

பொருள்

இப்பாட்டியல் தனிநிலைச் செய்யுள் தொடர்நிலைச் செய்யுள் இரண்டன் இலக்கணமும் கூறுவது. இதனால் யாப்பிலக்கணமும் பாட்டியல் இலக்கணமுமாகிய இரண்டன் இலக்கணங்களையும் இந்நூலில் கூறினார் என்க.

முன்னியல்கள் மூன்றும் யாப்பிலக்கணம் கூறுவன. பின்னிரண்டு இயல்களும் பாட்டியல் இலக்கணம் கூறுவன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/384&oldid=1474343" இலிருந்து மீள்விக்கப்பட்டது