பக்கம்:இலக்கண வரலாறு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxvii

செய்யுளியலொடு அல்லது யாப்பியலொடு சார்த்தி வைக்கும் அளவிலேயே நின்றது. தனி இலக்கண வடிவு பெற்றும் எண் பெறாத இலக்கணமாக அமைந்தது அது.

ஆறாம் இலக்கணம் எனப் புலமை இலக்கணத்தைக் கொண்டார் தண்டபாணி அடிகளார். அதிலுள்ள சில செய்திகள் பாயிரம் பற்றி வருவன (நூலாசிரியன் பற்றியன). எனினும் அடிகளார் பார்வை தனிப் பெரும் பார்வை. அவர் தம் நூலின் பெயர் அறுவகை இலக்கணம் என்பது. ஏழாம் இலக்கணமும் அடிகளார் இயற்றினார் என்பதை,


“ஆழா அரிய அனேக விதிநிறீஇ
ஏழாம் இலக்கணம் எனவுமொன் றியம்பினன்”

என்று பூவை கலியாணசுந்தரர் கூறும் சிறப்புப் பாயிரத்தால் அறியலாம். அதனைப் பொதுமை இலக்கணம் என்பர்.

இவ்விலக்கண வரலாறு, தன் பெயர் விளக்கம் முதலாக ஐம்பது பருப்புகளையுடையது. இப்பகுப்புகளில் இடம் பெறாத இலக்கண நூற்பட்டியினை இணைப்பாகக் கொண்டது. சிறப்புப் பெயர் அடைவும் இணைப்பாகக் கொண்டது.

தெரிந்த வகையான் கால அடைவில் வருவது. காலம், ஆய்வால் மாறுதலும் கூடும். இலக்கண வரலாறு என்பதை உட்கொண்டு, நூலாசிரியரைப் பற்றிய முழு வரலாறும் கொண்டதில்லை. குறிப்பாகச் சில செய்திகளே வரும். இயன்ற வகையால் உரை நயம், நூல் நயம் ஆகியனவும் குறிக்கப்படுகின்றன,

பதிப்பு, பதிப்பாளர் பற்றிய செய்திகளும் அவ்வப்பகுதியிலேயே இடம் பெறுகின்றன. உரையாசிரியர்கள், உரைநயங்கள் என்றெல்லாம் பல நூல்கள் வெளிவந்துள்ளன. திறனாய்வு நூல்கள், இலக்கணக் கட்டுரைகள், இலக்கண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/39&oldid=1471341" இலிருந்து மீள்விக்கப்பட்டது