பக்கம்:இலக்கண வரலாறு.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

359


தம் குருவர் மாசிலாமணி தேசிகர். இவர் தருமபுரத் திருமட நான்காம் பட்டத்திலிருந்தவர். குமர குருபரருக்குப் பின் ஆறாம் பட்டத்தில் இருந்த தில்லை நாயக சுவாமிகள் என்பார் திருப்பனந்தாள் காசி மடத்தை கி. பி. 1720 இல் நிறுவினார். இவற்றால் குமரகுருபரர் 17 ஆம் நூற்றாண்டினர் என்பது விளங்கும், இவர் சைவஞ் சார்ந்தவர் என்பது வெளிப்படை.

சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட இக்கோவை குறிப்பாகச் சிதம்பரரைச் சொல்லியும் விளித்தும் பாடுதலால் இப்பெயர் பெற்றது. சிதம்பர மும்மணிக் கோவை என்பதொரு நூல் இவ்வாசிரியர் இயற்றியதும் எண்ணலாம். “வாழ்த்துமின் தில்லை” என்னும் நிறைவுச் செவியறிவுறூஉ மருட்பாவும் பிறவும் இதனை விளக்கும்

நூற் செய்தி

இக்கோவையில் வெண்பா விகற்பம், வெண்பாஇனம், ஆசிரியப்பா விகற்பம், ஆசிரியப்பா இனம், கலிப்பா விகற்பம், கலியினம், வஞ்சிப்பா விகற்பம், வஞ்சியினம், மருட்பா என்னும் ஒன்பது பகுப்புகளும் 84 எடுத்துக்காட்டு களும் உள.

“பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுக
ஆங்கொன்றைக் கண்ணி யவர்”

என்பது வெண்பா விகற்ப முதற்பாட்டு. இதற்குரிய குறிப்பு:

"இது சீர்முழுதும் எதுகை ஒன்றத் தொடுத்தமையால் தலையாகெதுகை. ‘பூங்கொன்றைக் கண்ணியான்’ எனவும், ‘பொன்மன் றிறைஞ்சிடுக’ எனவும் வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் விரவி வருதலின் இஃது ஒழுகிசைச் செப்பலோசைத்து. இதனானே வெண்பா இரண்டடிச் சிறுமையுடைத் தென்பதூஉம் கொள்க. இதனுள் கண்ணியவர் என்னும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/404&oldid=1474412" இலிருந்து மீள்விக்கப்பட்டது