பக்கம்:இலக்கண வரலாறு.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362


காலம்

இவர் வேதியர் என்று சொல்லப்பட்டிருத்தலால் வேதமதத்தர் (வைதிகர்) என்க. இவர் காலத்து வாழ்ந்த பெரும்புலவர்கள் சுவாமிநாத தேசிகர், வைத்தியநாத தேசிகர் முதலியோர். காலம் 17.ஆம் நூற்றாண்டு.

பாயிரம்

நூலின் நிறைவில் நூல் கேட்டவர், நூலின் அளவு ஆகியவை பற்றி இரண்டு வெண்பாக்கள் உள்ளன:

“பேர்கொண்டு நின்றபிர யோக விவேகத்தைச்
சீர்கொண்ட ராமபத்திர தீக்கிதன்தான்— நேர்கொண்டு
கேட்டான் இனிக்கண்ணாற் கேட்கும் பதஞ்சலிதான்
கேட்டாலென் கேளாக்கால் என்”

“உம்பர்க் குரியபிர யோக விவேகத்தை
ஐம்பத் தொருகவிதை யாலுரைத்தான் — செம்பொற்சீர்
மன்னு மதிற்குருகூர் வாழ்சுப் பிரமணியன்
என்னும் ஒருவே தியன்”

காரக படலம், சமாச படலம், தத்தித படலம் திங்ஙுப் படலம் என நான்கு படலங்களையும் இவற்றுக்கு முறையே 17, 11, 6, 17 ஆக 51 காரிகைகளையும் கொண்டது இந்நூல்.

இராமபத்திர தீக்கிதர் தஞ்சை மராட்டிய மன்னன் சாசியால் ஆதரிக்கப்பட்டவர் என்றும், வடமொழிப் புலவர் என்றும் அறிய வருதலால் அம்மன்னரின் காலம் (கி.பி. 1684-1712) இவர் காலம் என உறுதி செய்யலாம். இதனால் சுப்பிரமணிய தீட்சிதர் காலமும் உறுதிப்படும்.

வடமொழி-தமிழ்

இவர் நூற்சூத்திரம் அன்றி உரைச் சூத்திரமும் இடையிடைச் செய்து வைத்தமையை, “பிரதிக்கினை மேற்கோளெனப் பெயர் பெறும்” இஃதுரைச் சூத்திரம். இவ்வாறு கவிதோறும் உரைக்கு முன்னாகப் பின்னாக உரைச் சூத்திரமும் செய்தாம். அதுகண்டு கொள்க.” என்கிறார். (2).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/407&oldid=1474415" இலிருந்து மீள்விக்கப்பட்டது