பக்கம்:இலக்கண வரலாறு.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

363

மேலும் “பண்டு கற்றோர் முன்னூலுள் ஏகதேசம் வடமொழிக் கூறுபாடும் அது தற்சமம் தற்பவமாகப் பொதுவெழுத்தாய்த் திரிவதும் கூறினார். யாம் இந்நூலுட் சொற்களின் பெயரை ஏகதேசம் தமிழாகவும் பிராயிகந் தற்சமந் தற்பவமாகவும் கூறினாம்” என்கிறார்.

இடுகுறி காரணம்

தொல்காப்பியர் ‘இடுகுறி’ என்பதொன்றைக் குறித்திலர். அவர் கொள்கை எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பதும், அப்பொருள் குறித்தல் நுணுகி நோக்குவார்க்குப் புலப்படும் என்பதுமாம். நன்னூலார் காரணப் பெயர், இடுகுறிப் பெயர் என வகுத்ததுடன் சிறப்பு, பொது எனவும் விரித்துக் கொண்டார். இவரோ தொல்காப்பியரையும் தம் கூட்டுக்கு வலித்து இழுத்து மாட்டுகின்றார்.

தொல்காப்பியனாரும் நன்னூலாரும் “வடமொழி இலக்கணம் பெற்ற தற்சமம் தற்பவமாகத் தத்தம் நூலுள்ளே எழுத்திற்கும் சொல்லிற்கும் காரணக்குறி இடுகுறியாகிய யோகரூட நாமங்களைச் சிறுபான்மை கூறினார். அவ்வாறு சிறுபான்மை கூறாது யாம் இந்நூலுட் பெரும்பான்மையும் தற்சமம் தற்பவங்களாற் கூறினாம். இப்பெரும்பான்மையும் கூறியது யாது பற்றி எனின், வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் இலக்கணம் ஒன்று என்பது அறியாது சம்ஞாபேதத்தாலும் பாடை வேற்றுமையாலும் இகழ்ந்து வேறென்பாரை நோக்கி என்க. இந்நூல் செய்ததற்கும் இதுவே பயன்" என்கிறார். “யாம் இந்நூலுட் கூறிய வடமொழிக் குறியெல்லாம் தமிழ் மொழிக்குமாம் என்க” என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.

முந்து நூல்

அகத்தியத்திற்கு முந்து நூல் பாணினி என்பதும், தொல்காப்பியத்திற்கு முந்து நூல் ஐந்திரம் என்பதும் இவர் கொள்கை. தொல்காப்பியச் சூத்திரவிருத்தியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/408&oldid=1474416" இலிருந்து மீள்விக்கப்பட்டது