பக்கம்:இலக்கண வரலாறு.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

கொடை நிலமும் உப்பளமும் இந்நாளிலும் இவர்தம் வழியினரிடமே உள்ளது என்று இலக்கண விளக்கப் பதிப்பாசிரியர் சி. வை. தாமோதரனார் தம் பதிப்புரையில் வரைகின்றார்.

இவர்தம் மைந்தர் சதாசிவ நாவலரைக் காணுதற்காகச் செம்மற்பட்டிக் காடு வழியே வந்த படிக்காசுப் புலவர், அச்சதாசிவ தேசிகரிடம் பயிலும் மாணவர்கள் தூதுளங்காய் பறித்துக் கொண்டே காரிகைப் பாடல்களை ஒப்பித்துக் கொண்டிருத்தலை அறிந்து வியந்தனராய்,

“கூடுஞ் சபையிற் கவிவா ரணங்களைக் கோளரிபோற்
சாடுஞ் சதாசிவ சற்குரு வேமுன்னுன் றந்தைதம்மாற்
பாடும் புலவர்கள் ஆனோம் இன் றிச்செம்மற் பட்டியெங்கும்
காடும் செடியுமென் னோதமிழ்க் காரிகை கற்றதுவே”

என்று பாராட்டினார்.

இவ்வாறே இவர்தம் மக்களும் மக்களின் மக்களும் பாவன்மையும் நாவன்மையும் மிக்கவராகப் பல்வேறு பரிசுகளும் நிலக்கொடைகளும் பெற்றுள்ளனர், பல்வேறு இலக்கியங்களையும் படைத்துள்ளனர். ஆதலால் வழிவழியாகத் தமிழ் வளர்த்தும் காத்தும் வந்த குடும்பம் வைத்தியநாத தேசிகர் குடும்பம் என்பது விளங்கும்.

ஐந்திலக்கணம்

இவர் காலத்திற்கு முற்பட்டதாம் நூல்கள் ஓரிலக்கணமும் ஈரிலக்கணமும் உடையனவாகவும் இருந்தன. ஐந்திலக்கணமுடைய வீரசோழியம் தமிழ்நெறிக்கு மாறுபட்டுச் சென்றது. ‘பிரயோக விவேகம்’ இன்னும் அப்பாற் சென்றது. உரைகளும் முரணியும் மயக்கியும் அமைந்தன. இவற்றையெல்லாம் எண்ணிய பட்டறிவாலும், பாடஞ்சொன்ன முறையாலும் முற்றிலும் புது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/413&oldid=1474419" இலிருந்து மீள்விக்கப்பட்டது