பக்கம்:இலக்கண வரலாறு.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

369

நூல் செய்யாமல், முற்றிலும் பழைமையையே கொள்ளாமல் ஓராற்றான் ஐந்திலக்கணமும் ஒருங்கு கற்கும் ஒரு நூலைப் படைத்தார் எனல் தக்கதாம்.

இனி இலக்கண விளக்கத்தின் பாட்டியலை இவர்தம் மைந்தர் தியாகராச தேசிகர் பாடினார் என்பர். அக்குறிப்பு பாட்டியல் வழியால் அறியக் கூடியதாகவே உள்ளது. சொல்லணி பற்றிய சில நூற்பாக்களைத் தேசிகரின் மற்றொரு மைந்தர் சதாசிவ நாவலர் இயற்றினார் என்பர். அக்கூற்றுக்குத் தக்க சான்றில்லை என்று மறுப்பர்.

பாயிரம்

இலக்கண விளக்கத்திற்குச் சிறப்புப் பாயிரம் செய்தவர் நூலாசிரியர் மகனாரும் மாணவரும் ஆகிய சதாசிவ நாவலர் ஆவர். அவர் திருவேங்கடநாதன் வேண்டிக் கொண்டவாறு,

“முன்னோர் நூலின் முடிவு நோக்கிச்
சொல்லும் பொருளும் ஒல்வன தழீஇப்
பல்சுவைக் கரும்பின் ஒருவட் டேய்ப்ப
இலக்கண விளக்கம் என்றொரு பெயர்நிறீஇப்
புலப்படுத் தியலுறப் பொருள் விரித் துரைத்தனன்”

என்கிறார்.

நூல்

இந்நூலின் முதலாவதாம் எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என ஐந்தியல்களையுடையது. இவ்வதிகாரத்தின் மொத்த நூற்பாக்கள் 158.

சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், இடைச்சொல்லியல், உரிச்சொல்லியல், பொதுவியல் என்னும் ஐந்தியல்களையுடையது. இவ்வதிகாரத்தின் மொத்த நூற்பாக்கள் 214.

இ.வ-24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/414&oldid=1474420" இலிருந்து மீள்விக்கப்பட்டது