பக்கம்:இலக்கண வரலாறு.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

இலக்கண விளக்கப் பதிப்பாசிரியர் சி. வை. தாமோதரனார் இது குறித்தெழுதுகிறார்;

“மலைமகள் என்பது மலைக்கு மகள் எனப்பொருள் தருமாயின், பூமலி (நன்னூலார் கொள்வது) என்பது இலை நிறைந்த என்றும் இடமகன்ற என்றும் பொருள் தர இடமில்லையா?

“நீடாழியுலகம் (வில்லியார்) என்பது நீள் தாழி உலகம் எனக் குற்றப்படாதா?

“மலைக்கு மகள்” என்று மறை ஞானசம்பந்த நாயனார் எடுத்தாண்ட மங்கல மொழியை அமங்கலப் படுத்துதல் தன் தாயை வேசி என்று ஏசுதல் போலும்.

“உலகளித்த தலைவன் என்றது குற்றம் என்றார். எழுத்ததிகாரத்தில் ‘உலகளித்த தலைவன்’ எனவும், சொல்லதிகாரத்தில் ‘உலகு புரந்தருளும் அமைவன்’ எனவும், பொருளதிகாரத்தில் ‘உலகினைப் பொழிக்கும் இமையவன்’ எனவும் ஆசிரியர் இறைவன் முத்தொழிலும் கூறிய புகுந்தாராகலின் ஈண்டுப்பட்ட குற்றமுண்டோ? ஆன்றோர் ஆங்காங்குக் கூறிய கடவுள் வணக்கத்திற் கடவுளின் தலைமையனைத்தும் ஒருங்கு சொல்லாது இரண்டொரு குணமாத்திரையே விதந்து தலைமை கூறுவது பெருவழக்கேயாம். முனிவரர் இஃதுணராதவரா? இதனால் ‘குற்றமே தெரிவார் குறுமாமுனி சொற்ற பாவிலும் ஓர் குறை சொல்லுவர்’ என்பதற்குத் தம்மை இலக்கியமாக்கினாரன்றோ!

“எண்பெயர் முறை பிறப்பு... (இதில்) மூன்று குற்றமேற்றினார். இஃது இலக்கண விளக்கச் சூறாவளியன்று நன்னூற் கருப்பைப் படையோடு சார்தற் பாலதென்று விடுக்க.

“சிவஞான முனிவரர் தெரித்த குற்றங்களின் இலக்ஷணம் எத்தன்மைய என்பதற்கு மேலே காட்டிய ஐந்து உதாரணமும் போதுமாதலின் இவ்வளவில் நிறுத்துதும்” என்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/421&oldid=1474466" இலிருந்து மீள்விக்கப்பட்டது