பக்கம்:இலக்கண வரலாறு.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

377

சிவஞான முனிவர் திறத்தை உணர்ந்து கூறுகிறார் சி. வை. தா: “அவரது பேரறிவு இமயமலை ஒப்பது. எளியேன் சிற்றறிவு அதன் முன் ஒரு பூ தூளி போல்வது. அன்னோர் தப்பை ஒப்பென்று தாபிக்கவும், ஒப்பைத் தப்பென்று வாதிக்கவும் வல்லர். அஃது அவர் காஞ்சிபுரத்து வைஷ்ணவ வித்துவான்கள் கொண்ட இறுமாப்பை ஒழித்தற் பொருட்டு, அவர்கள் தலைமேற் கொண்ட இராமாயணத்து நாந்திச் செய்யுளை முதலிற் பங்கப்படுத்திப் பின்னர் அதனையே அவர்கள் தலை வணங்கித் தம்பிழையைப் பொருத்தருள்க என்று வேண்டிய பொழுது சரியென்று நாட்டியதனான் விளங்கும்” என்கிறார். இவர் கூறியது நூலுருவுற்றது. அது இராமாயண சக்கோத்ர விருத்தி என்பது. இவர் பொருள் கூறிய நாந்திச் செய்யுள் “நாடிய பொருள் கைகூடும்” என்பது.

மறுப்புக்கு மறுப்பு

இவர்தம் தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் சிலவற்றைக் கண்டித்து அரசஞ் சண்முகனார் தம் பாயிர விருத்தியில் எழுதினார். இவர்தம் சூறாவளியை மறுத்து இலக்கண விளக்கப் பதிப்புரையில் எழுதினார் சி.வை. தாமோதரனார். கலித்தொகைப் பதிப்பிலும் இதனைக் கருதினார்.

“சூறாவளி மாறாய் மோதி என்? சூத்திர விருத்தி
வான் ஆர்த் ததிர்த் திடித்தென்? கன்ன துரோண
சயித்திரதர் என்ன துரோகம் இயைத்திடினும்
தேரொன்று கிடையாத குறையன்றோ களத்தவிந்
தான் சிறுவன்? அச்சு வாகனங் கிடையாத குறை
யன்றோ இலக்கண விளக்கம் அடங்கியது”.

என்று குறித்திருக்கிறார். இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு ஒன்றும் சபாபதி நாவலரால் வரையப்பட்டது! கண்டனமும் மறுப்பும் களித்தாடிய காலமது.

பதிப்பு

இலக்கண விளக்கச் சூறாவளி ஆறுமுகநாவலரால் வெளியிடப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/422&oldid=1474471" இலிருந்து மீள்விக்கப்பட்டது