பக்கம்:இலக்கண வரலாறு.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

393

அகப்பொருட்கோவை முதல் ஆற்றுப்படை வரை அகரநிரல் மாறவில்லை. இது நூலாசிரியன் அமைப்பைத் தெரிவிக்கும். பின்னர் இகரத்தில் அகர நிரல் மாறிற்று. ஐந்திணைக்கு அப்பால் வருக்கம், மும்மணி நவமணி எனக் குழம்பிற்று. இம்மாறு நிலைக்கு ஏடுகளின் இடமாற்றம் காரணமாகலாம்.

அளவு

இத்தீபத்தில் 97 வகை நூல்களுக்கு இலக்கணமுள்ளது. நூல் இறுதியில் உள்ளது சமுத்தி என்பது.

விளக்கு நிலை பற்றிய நூற்பா:

“விளக்கு நிலையே வேலும் வேல்தலையும்
விலங்கா தோங்கிய வாறு போலக்
கோலொடு விளக்கும் ஒன்றுபட் டோங்குமா
றோங்குவ தாக உரைத்தல் என்ப” (64).

தாண்டக இலக்கணம் கூறுகிறார்:

“தாண்டகம் என்பது செய்யுள் ஓரடிக்
கிருபத் தேழெழுத் திசைய இயம்புதல்
அதுவே அளவியல் தாண்டகம் அவற்றுளோர்
அக்கரம் அஃகில் அளவழித் தாண்டகம்” (79).

நெடுந்தாண்டகம், குறுந்தாண்டகம் என்பவற்றினின்று வேறுபட்ட வகை இவை. எழுத்தெண்ணிப் பாடப்படுவது குறித்தது.

இதன் காலம் முத்துவீரியத்தின் காலத்தோடு தொடர்புடையதாகலாம். நூற்பாவமைதி நுவலுவ திது.

பதிப்பு

அறிஞர் ச.வே. சுப்பிரமணியம் இதனை 1980 இல் அச்சேற்றியுள்ளார். ஆய்வும் உரையும் விளக்கமும் உடையது இப்பதிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/438&oldid=1474535" இலிருந்து மீள்விக்கப்பட்டது