பக்கம்:இலக்கண வரலாறு.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாகச் சிறப்புப் பாயிரம் கூறுவது கொண்டு சைவ சமயத்தவர் எனலுண்டு. தற்சிறப்புப் பாயிரங்களின் பொருணிலை சிவனெறிக் கொள்கை கூறுவதையும் காட்டுவர். அன்றியும் திருக்கோவையார் காட்டும் 400 துறைகளையும் அப்படியே அகப்பொருளில் கொள்வதும் கருதத் தக்கதே.

நூலளவு

முத்து வீரியம் நூற்பா யாப்பால் அமைந்தது. எழுத்ததிகாரம் எழுத்தியல், மொழியியல், புணரியல் என மூவியல்களையும் சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், ஒழிபியல் என மூவியல்களையும் பொருளதிகாரம் அகவொழுக்கவியல், களவொழுக்கவியல், கற்பொழுக்கவியல் என மூவியல்களையும் யாப்பதிகாரம் உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் என மூவியல்களையும் அணியதிகாரம் சொல்லணியியல், பொருளணியியல், செய்யுளணியியல் என மூவியல்களையும் ஓர் ஒழுங்குறக் கொண்டுள்ளன. முதல் தற்சிறப்பு நீங்கிய நூற்பாக்கள் ஐந்ததிகாரங்களுக்குமாக 1288 ஆகும்.

எழுத்ததிகாரம்

சார்பெழுத்து மூன்று என்பது தொல்காப்பியம். பத்து என்பது நன்னூல். முத்து வீரியம் உயிர்மெய், ஆய்தம் என்னும் இரண்டை மட்டுமே சார்பென்கிறது. தொல்காப்பியர் சார்பெனக் கூறிய குற்றியலிகரத்தையும் இவர் நீக்கியமை தனியெழுத் தன்மையால் எனலாம். இனிப் புள்ளியுண்மையால் உயிர் மெய்யெனக் கொண்டு நீக்கினார் என்பது ஏற்குமேல் கொள்க.

“சார்புயிர் மெய்தனி நிலையிரு பாலன”

என்பது அந்நூற்பா (22).

அளபெடையை எட்டென்கிறார். இயற்கை அளபெடை, செயற்கை அளபெடை, இன்னிசை அள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/448&oldid=1474722" இலிருந்து மீள்விக்கப்பட்டது