பக்கம்:இலக்கண வரலாறு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


இலக்கணம் என்பதை விளக்குகிறார் பாவாணர்

“இலக்கு — இலக்கணம் – சிறந்த நடைக்கு எடுத்துக் காட்டாக அல்லது கற்றோர் பின்பற்றும் இலக்காக, கூறப் பெறும் மொழியமைதி (Grammer).

வடமொழியில் குறி, குறிக்கோள், இயல், இயல் விளக்கம் (Definition), விளக்கக்காட்டு (illustration) என்னும் பொருள்களிலேயே லக்ஷ்ண என்னும் சொல்லை ஆள்வர்.

லக்ஷ் என்றும் சொற்கு லக் (Lag = That which is a attached or fixed) என்பதை மூலமாகக் காட்ட முயல்வது பொருந்தாது” — வடமொழி வரலாறு, பக்கம் 90.

வடமொழியாளர் தம் இலக்கணத்தை ‘வியாகரணம்’ என்பர்; இலக்கணம் என்னார். இலக்கணம் வடசொல் என்பார் இதனை எண்ணிப் பார்த்தல் வேண்டும். எ-டு: பாணினி வியாகரணம்,

இசை கூத்து முதலிய கலைகளுக்கும் பண்டே இலக்கணம் இருந்தமை,

“இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து”

எனவரும் சிலம்பால் (3:12) அறிய வரும். இவ்வடிக்கு வரும் அரும்பதவுரை, அடியார்க்குநல்லாருரை ஆகியவற்றால் அவ்விலக்கண நூற் சான்றுகளையும் விரிய அறியலாம்.

குறி: குறி என்பதும் இலக்கணம் என்னும் பொருள் தருவதைக் குறித்தோம். இலக்கணம் வல்லோர் ‘குறியறிந்தோர்’ எனப்பட்டனர்.


“உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக்
கொள்ளும் என்ப குறியறிந் தோரே”

என்னும் அகத்திணை நூற்பாவால் அப்பொருள் வருதல் தெளிவாம். (தொல், 993.)

நூல்: நூல் என்பது பழநாளில் இலக்கணத்தையே குறித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/47&oldid=1474541" இலிருந்து மீள்விக்கப்பட்டது