பக்கம்:இலக்கண வரலாறு.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

447

பயனுடையது அன்மையால்’ கூறாமை குறிக்கிறார். சேர்வையணி, கலவையணி என்பவற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குகிறார்.

இது 1828இல் இலக்கண விளக்கச் சுருக்க வினா விடையின் பகுதியாக அமைந்து வெளிவந்தது. கழகப் பதிப்பாக 1937இல் வெளிவந்தது.

இலக்கணச் சந்திரிகை

இது வடமொழிச் சொற்கள் தமிழில் வழங்கும் முறை குறித்து எழுதப்பட்டதொரு நூல். இருமொழிப் புலமை வாய்ந்த சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளையால் எழுதப்பட்டது. எழுத்தொருப்பாடு, உபசருக்கச் கூறுபாடு, இடைச்சொற் கூறுபாடு, தத்திதாத்தப் பாகுபாடு, பெயர்ச்சொற் பாகுபாடு, வினைச்சொற் பாகுபாடு, உரிச்சொற் பாகுபாடு முதலிய பகுதிகளையுடையது. இது 1987இல் நூலுருக் கொண்டது.

செய்யுள் இலக்கணம்

அட்டாவதானம் கலியாணசுந்தர யதீந்திரரால் இயற்றப்பட்ட நூல். 1893இல் முதற்பதிப்பு வெளிவத்தது. உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் என்னும் மூவியல்களில் யாப்பிலக்கணத்தை உரைநடையில் தக்க எடுத்துக்காட்டுகளுடன் கூறுகின்றது. யாப்பு நூல்கள் காட்டாத பல எடுத்துக்காட்டுகளைப் புதியதாகக் காட்டுகின்றது.

சித்திர கவி விளக்கம்

இதனை இயற்றியவர் சூரிய நாராயண சாத்திரியார் (1870-1903). தண்டியலங்காரத்திலுள்ள சித்திரகவிகளின் வகையை மாணவர் எளிதில் கற்குமாறு விளக்கமும் உரையும் எடுத்துக்காட்டும் படமுமாகச் செய்யப்பட்டதொரு நூல். இது 1898இல் முதற்பதிப்பாக வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/492&oldid=1475096" இலிருந்து மீள்விக்கப்பட்டது