பக்கம்:இலக்கண வரலாறு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

காணலாம். அந்நூலும் அகத்தியரைத் தமிழறிந்தவராகக் கூறாமை நோக்கிக் கொள்க." (௸. பக். 214).

இவை தமிழ் வரலாறுடையார் குறிப்புகள். ஆயினும், நச்சினார்க்கினியர் முதலோர் உரை கண்டு தொல்காப்பியர்க்கு மூலவராகவும் முன்னிலக்கணம் செய்தவராகவும் அகத்தியரை இத் தமிழ் வரலாறுடையார் கூறுவது நம்பத்தக்கதாக இல்லை. “தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி” செய்தார் கருத்தும் (மு. இராகவ ஐயங்கார்) நச்சினார்க்கினியர் உரைக்குச் சான்று தேடி நிறுவுதலில் தலைப்படுதலை யன்றித் தொல்காப்பிய மூலநூல் குறிப்பைப் பற்றிக் கருதவே யில்லை! அகத்தியச் சூத்திரங்கள் என்று உரையாசிரியர்களால் காட்டப்பட்டுள்ள நூற்பாக்களின் அமைதி, சொல்லாட்சி ஆகியவற்றைத் தெளிந்து கூறவல்ல இவ்வறிஞர்களும் பிறர் பிறரும், 'புனைவு' கொண்டு அகத்தியரை 'முனைவராக' நிலை நாட்டப் புகுந்த கருத்துடையவராகவே காட்சியளிக்கின்றனர்.

அகத்தியரின் மாணவர் பன்னிருவர் என்பதும், அவருள் தொல்காப்பியர் தலைமையானவர் என்பதும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு மேம்பட்டுக் கிளர்ந்த புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப் பொருள் விளக்கம், தண்டியலங்காரம் முதலான நூல்களால் அறிய வருகின்றன.

“மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலமும்”

என்பது புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரப் பகுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/66&oldid=1471361" இலிருந்து மீள்விக்கப்பட்டது