பக்கம்:இலக்கண வரலாறு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மொழியே என்று ஆர்வத்தால் கிளர்ந்து உரைக்கத் தொடங்கினர். அதனால், வடமொழியாளர் கருத்தை வாங்கிக்கொண்டு தம் கருத்தையும் இணைத்துக் கதையாக்கினர்:

“வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தமிழ்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வகுத்துரைத்தார் கொல்லேற்றுப் பாகர்”

என்று சிவஞான முனிவரர் பாடினார். பிறர் பிறரும் தம் நூல்களில் இக்கருத்தை உலவ விட்டனர். மொழியியன் முறை ஈதன்று என்பது ஆய்வுடையார் எவரும் எளிதில் அறிவதே.

மொழி என்பது மாந்தர் படைப்பு என்றும், அப்படைப்பும் ஒருவரால் ஒரு காலத்து ஓரிடத்துப் படைக்கப்படாமல் பலரால் பலகாலத்துப் பலவிடங்களில் உருவாக்க முற்று, ஒழுங்குறுத்தப்பட்டது என்றும் அறிவார் எந்த மொழியையும் ‘தெய்வமொழி’ என்று சொல்லார். அவ்வாறு சொல்வதை, அறிவுலகம் ஏற்றுக் கொள்வதும் இல்லை என்ற அளவில் அமைந்து மேலே செல்வாம்.

இடைக்கால நூல்களின் பாயிரங்களில் அகத்தியர் பேரிலக்கண ஆசிரியர் என்றும், அவரிடம் பயின்றார் பன்னிருவர் என்றும், அவருள் தொல்காப்பியர் தலை மாணவர் என்றும், பனம்பாரர் அதங்கோட்டாசான் முதலியோர் உடன்மாணவர் என்றும் அறிந்து கொண்ட உரையாசிரியர் சிலர்க்குத் தொல்காப்பியப் பாயிரம் ஒரு திகைப்பாக இருந்தது போலும். அவருள் ஒருவர் நச்சினார்க்கினியர்.

“பாயிரம் பாடியவர் பனம்பாரர்; தலைமை ஏற்று அரங்கேற்றம் நடாத்தியவர் அதங்கோட்டாசிரியர்; அவையமோ, பொதியில் தலைவனாகவும் பாண்டிநாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/69&oldid=1471364" இலிருந்து மீள்விக்கப்பட்டது