பக்கம்:இலக்கண வரலாறு.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi

வழியில் சொல்லாக்கம் செய்பவர். பேச்சால் எழுத்தால் வாழ்வில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு. அவர்கள் எழுதிய இலக்கியவகை அகராதி சிற்றிலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்குக் கிடைத்த கருவூலம்; கருத்துக் களஞ்சியம்.

பாவாணர் ஆராய்ச்சி நூலகம் நடத்துபவர் இளங்குமரனார். அவரே ஒரு நடமாடும் நூலகம். தொடர்ந்து தமது அரிய ஆய்வு நூல்களை வெளியிட வாய்ப்பளித்து வரும் ஆசிரியப் பெருமகனார்க்கு நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வாய்வு நூலுக்கு மூதறிஞர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் மிக நுட்பமான ஆராய்ச்சி முன்னுரை வழங்கியுள்ளார்கள். இலக்கண வரலாறு பெற்ற தமிழின் சிறப்பினை அவர்கள் எடுத்து விளக்கும் திறன் தனி நூலாக விரியும் தகைமை சான்றது. நாளும் தமிழ் வளர்க்கும் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் தொல்காப்பியத் தகைஞராக அவர்கள் விளங்குகிறார்கள். எழுத்ததிகாரத்திற்குத் தெளிவான விளக்கவுரை வரைந்துள்ளார்கள், இலக்கணப் புலமையில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி, தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழியக்க ஆளுநர் எங்கள் பேராசிரியர் வ. சுப. மா. அவர்களின் ஆய்வுரை, நூலுக்கு நுழைவாயிலாக, தோரண வாயிலாக அமைந்துள்ளது.

உரையாசிரியர் என்னும் பெருநூலைப் படைத்து, பேரும் புகழும் பெற்றுப் பொன்னும் பொருளும் பெற்ற சிந்தனையாளர் பேராசிரியர் மு. வை. அரவிந்தன் அவர்கள் ஆராய்ச்சி உரை வழங்கியுள்ளார்கள், மதி நுட்பம் நூலோடு வாய்ந்த அரவிந்தன் நூலின் பன்முக நலன்களை மனம் உவந்து பாராட்டியுள்ளார். நூலின் கட்டமைப்பை, கருத்துகளின் வலிமையைச் சமன்செய்து சீர்தூக்கியுள்ள திறன் வியந்து பாராட்டுதற்குரியது. இது போன்ற பெருநூல்கள் வெளியிடத் தமிழ் மக்களின் தொடர்ந்த நல்லாதரவை வேண்டுகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/7&oldid=1508020" இலிருந்து மீள்விக்கப்பட்டது