பக்கம்:இலக்கண வரலாறு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

வரலாற்றிலோ தொல்காப்பியனார் இடம் பெற்ற செய்தி தானும் இலது. தொல்காப்பியரைப் புகழ்ந்து புகழ்ந்து போற்றிய பாயிரத்தார் எவரும் பகராத பெயர்! பகராத பெற்றோர்! பசுராத உடன் பிறப்பு!

எஞ்சிய செய்திகள் உள்ளனவே! இவை அகத்தியர்க்குப் பெருமை தருவனவா? தொல்காப்பியனார்க்குப் பெருமை தருவனவா? புலமைக்குத் தான் மதிப்புத் தருவனவா? நூலரங்கேற்றத் தலைவர் அதங்கோட்டார்க்குத்தான் பெருமை சேர்ப்பனவா? இல்லை; புனைந்தவர் எவரே யெனிலும் அவர்க்குப் புகழ் கொழிப்பனவா? ‘அரில் தபத் தெரிதல்’ என்பதை விளக்கும் புனைவில் இத்துணை அரில்களா? முழுதுணர்ந்த சான்றோர் பெருமக்கள் நடைமுறை வாழ்வே இப்படி என்றால் கல்லா மாந்தர் வாழ்வு எத்தகையதாக இருந்திருக்கும், என்று நமக்கு எண்ணம் உண்டாகாதா? இக்கதை, புகழ்தற்கே எழுந்ததெனக் கொண்டாலும் விளைவு பழியேயாம்.

அகத்தியர் மாணவர் பன்னிருவர் பெயர்களும் நூல்களால் அறிய வருகின்றன. அப்பெயர்கள்:

தொல்காப்பியர், அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேஎய், வையாபிகன், வாய்ப்பியன், பனம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கை பாடினி, நத்தத்தன், வாமனன் என்பன.

இவர்கள் தனித்தனி ஒரு படலமாகச் செய்த பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலைக்கு உதவிற்று என்று அப்பாயிரம் கூறுகின்றது.

“ஆனாப் பெருமை அகத்தியன் என்னும்
அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல்
பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர்
நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்”

என்பது பன்னிரு படலப் பாயிரத்தின் பகுதியாகவும் சொல்லப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/73&oldid=1471374" இலிருந்து மீள்விக்கப்பட்டது