பக்கம்:இலக்கண வரலாறு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

பன்னிரு படலத்தில் வெட்சிப் படலம் தொல்காப்பியர் செய்தது என்று கூறுவாரை இளம்பூரணர் மறுத்துரைக்கின்றார். அகத்தியர் மாணவர் அல்லர் தொல்காப்பியர் என்னும் கருத்துடையார், பேராசிரியர் காலத்திலேயே இருந்திருக்கின்றனர் என்பது அறிய வருகின்றது. அசுத்தியர்க்கு மாணவர் தொல்காப்பியர் என்று கொள்வார் “நான்கு வருணத் தொடுபட்ட சான்றோர்” என்றும் அவ்வாறு கொள்ளார், “வேத வழக்கொடு மாறுகொள்வார்” என்றும் அவர் குறிக்கிறார்.

இக்கருத்து உரையாசிரியர்கள் காலத்தில் தோன்றியிருக்க வேண்டுமானால் காரணம் இருக்க வேண்டும் அன்றோ! ஒன்றற்கு ஒன்று ஒவ்வாக் கதைகள் ஒருபால் ஐயத்தைக் கிளப்பியிருக்கும். அகத்தியர் நூற்பாக்களெனக் கூறப்பட்டவற்றின் தகுதியும் ஐயத்தை வளர்த்திருக்கும்.

தொல்காப்பியம் செய்யுளியலில் ‘ஆறடி அராகம்’ எனவும் ‘தரவே எருத்தம்’ எனவும் "இருவயினொத்து" எனவும் வரும் அகத்திய நூற்பாக்களை இளம்பூரணர் மேற்கோள் காட்டியுள்ளார். தெய்வச்சிலையார் ஓரிரு நூற்பா காட்டுகிறார் (சொல். வேற். 63).

இவ்வாறிருக்க, நன்னூல் முதலுரையாசிரியர் மயிலைநாதர் ஓரிரு நூற்பாக்கனை எடுத்தாள்கிறார். அவர்க்கும் மிகப் பிற்பட்ட சங்கர நமச்சிவாயரோ பதின்மூன்று நூற்பாக்களை எடுத்தாள்கிறார். இதனால் பிற்பட்ட காலத்தே அகத்தியர் பெயரால் இலக்கண நூற்பாக்கள் உருவாக்கம் செய்யப்பட்டு உலாவ விடப்பட்டன என்பது தெளிவாகின்றது. அந்நூற்பாக்களின் அமைதியும் சொல்லாட்சியும் தொல்காப்பியத்தொடு நோக்க எத்தகு பிற்பட்ட காலத்தவை என்பதும், நூற்பாத் தகவும் எத்தகு சீரற்றது என்பதும் விளக்கமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/74&oldid=1471375" இலிருந்து மீள்விக்கப்பட்டது