பக்கம்:இலக்கண வரலாறு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


“வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெயரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்” (1336)

“தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” (385)

எனத் தமிழமைதியையும்,

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”(884)

என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க.

தொல்காப்பியப் பழமை

சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று.

தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது.

இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண்டனுள் “ஆயிரம் விரித்த” என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றதாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/81&oldid=1471131" இலிருந்து மீள்விக்கப்பட்டது