பக்கம்:இலக்கண வரலாறு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை சென்றளந் தறிந்தோர் போல,
இனைத்தென்போரும் உளரே”

என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, “நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு” உவமை சொல்லும் அளவில் தெளிந்திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம்.

தொல்காப்பியர் சமயம்:

தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில்தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றில. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் சைவரெனல் சாலாது.

தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம்.

தொல்காப்பியரைச் சமண சமயத்தார் என்பது பெரு வழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்க தன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

சமண சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் கடவுள் வணக்கம் உடையவை. சமண சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/87&oldid=1471400" இலிருந்து மீள்விக்கப்பட்டது