பக்கம்:இலக்கண வரலாறு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமண சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுத்தம் உடையவர் ஆதலால்.

சமண சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லை யளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் குறிப்பு இல்லை, “மாவும் மாக்களும் ஐயறி வினவே'” என்னும் தொல்காப்பியர், “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை.

சமண சமயத்தார் நிலையாமையை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும்,

“நில்லா உலகம் புல்விய நெறித்தே” என 'உலகம் நிலையாமை பொருந்தியது' என்ற அளவிலேயே அமைகிறார்.


“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (1138)

என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர் நிலையில் இல்லறத் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி.

தொல்காப்பியர் சமண சமயத்தார் எனின் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/88&oldid=1471401" இலிருந்து மீள்விக்கப்பட்டது