பக்கம்:இலக்கண வரலாறு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

தான் வேண்டும். தலைச் சங்கத்துக்கு நூல் அகத்தியம் எனவும், இடைச்சங்கத்துக்கு நூல்கள் அகத்தியம் தொல்காப்பியம் மாபுராணம் இசை நுணுக்கம் பூதபுராணம் எனவும், கடைச்சங்கத்துக்கு நூல்கள் அகத்தியம் தொல்காப்பியம் எனவும் இலக்கண நூல்களைச் சுட்டுவதிலிருந்தே தமிழின் இலக்கணத் தொன்மையும் ஆதிக்கமும் போதரும். மேலும் இன்றுள்ள தொல்பனுவல்களுள் தொல்லிது தொல்காப்பியம் என்பதனால், இலக்கியப் பனுவல்களைக் காட்டிலும் இலக்கண நூலைப் போற்றிக் காத்த புலவோர்தம் உரப்பாடு பெறப்படும். காலத்தால் அழியாது சீரிளமைத் திறங்குன்றாது இன்றும் விளங்கும் கன்னி மொழியாகத் தமிழ் வாழ்வதற்கு, வரம்புடைய இலக்கணக் கரைகளே வேலியாகும். இவ்வுண்மையை உணரமாட்டாத அறிவறைகள் இலக்கணக் கரைகளை உடைத்து ஏனைச் சின்மொழிகளைப்போலச் செந்தமிழையும் கறைப்படுத்த முயல்வர்; இதுவே முற்போக்கு எனவும் மருட்டுவர். இங்ஙனம் மயங்குவாரை இலக்கணப் பெரும் புலவர் இளங்குமரன் சீர்பட எழுதியிருக்கும் இந்த இலக்கண வரலாறு திருத்தும், உண்மையுணர்த்தும் என நம்புகின்றேன்,

பல இலக்கியப் பனுவல்கள் அழிந்தன, அழிக்கப்பட்டன போலவே பல இலக்கண நூல்களும் உரைகளும் அழிவுபட்டன. அழிவுற்ற நூல்களுள் பெயர்களும் தெரியாமற் போயினவும் உண்டு. இவை தகுதியின்மையால் இறந்தன என்று ஊகிப்பதற்கில்லை; படியெடுத்துக் காப்பார் இன்மையாலும் அழியப் பார்ப்பார் இருந்தமையாலும் புதையுண்டன. இன்றுங் கூட அச்சிட்ட பல தமிழ் நூல்களின் கதி இதுவே.

நல்லூழால் நமக்குக் கிடைத்திருக்கும் இலக்கண நூல்களும் உரைகளும் தஞ்சைப் பெருவுடையார் கோபுரம் கோயில் போலத் தமிழின் இலக்கணச் சிறப்பினைக் காட்டும் சான்றுகளாக உள. இவற்றுள் தொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/9&oldid=1471310" இலிருந்து மீள்விக்கப்பட்டது