பக்கம்:இலக்கண வரலாறு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்திற்கு வைப்பகம்.

பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினதாம்.

“அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்” என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம்.

இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? எனின் இவ்விலக்கண வரலாறு சுட்டுவனவும் சுட்டாதனவுமாகிய இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித்தாயாயும், நல்லாசானாகவும் இருந்து வளர்த்து வந்த வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்து வரும் 'ஒலியன்' ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல்யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? “தொல்காப்பியன் ஆணை” என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர்கள், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயிற்று என்பதை நுணுகிநோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும்.

இலக்கணப் பகுப்பு விரிவு:

இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்புகளுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/99&oldid=1471415" இலிருந்து மீள்விக்கப்பட்டது