பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 107



‘கோட்டம் பலத்துத்துஞ்சிய’ மாக்கோதை என மக்கள் அழைக்கலாயினர். சில ஏடுகளில் ‘கோட்டம்பலத்துத் துஞ்சிய’ என்ற தொடருக்குப் பதில் ‘கூத்தம்பலத்துத் துஞ்சிய’ என்ற தொடர் காணப்படுகிறது. "சேர நாடு கூத்துகளுக்குப் பேர் பெற்ற நாடாகும். கூத்து நடைபெறும் கூத்தம்பலங்கள் பல அந்நாட்டிலிருந் திருத்தல் கூடும். மன்னன் மாக்கோதை அத்தகைய கூத்தம்பலத்தே யிருந்து ஆங்கு நடைபெற்ற கூத் தொன்றைக் கண்டிருக்குங்கால் உயிர் துறந்தனன். அதனால் அவன் பெயர் கூத்தம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என வழங்குவதாயிற்று,” என்று சிலர் கூறுவர். கிள்ளி, வளவன் என்பன சோழர்களைக் குறிப்பன போல, வழுதி, மாறன் என்பன பாண்டியர்களைக் குறிப்பன போலக், கோதை என்பது சேரர்களைக் குறிக்க வரும் பெயர்களுள் ஒன்றாகும்.

மன்னன் மாக்கோதை பாடிய புறநானூற்றுப் பாடல், அவன் தன் மனைவிபால் கொண்டிருந்த பேரன்பைப் புலப்படுத்தும். மாக்கோதையின் மனைவியாராகிய அரசமாதேவியார் இறந்தார். அவர் உடலை ஈமத்தீயிட்டுக் கொளுத்தி விட்டனர். அவர் உடல் எரிகின்றது. அதைக் கண்டு நிற்கும் மாக்கோதையின் உள்ளம் கடந்த காலத்தை எண்ணித் துயர் உறுவதாயிற்று. “பிரியேன்; பிரியின் உயிர்தரியேன்!” எனக் கூறிய உரைகளை எண்ணிப் பார்த்தான்; அவன் உள்ளம் நாணிற்று. “இன்று அவள் இறந்து விட்டாள். அவளுடல் என் கண் முன்னரே