பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
கணைக்கால் இரும்பொறை

மிழரசர் மூவருள் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுவோர் சேர வேந்தராவர். மூவேந் தரைக் குறிப்பிடுங்கால், சேர, சோழ, பாண்டியர் எனச் சேரரை முதற்கண் வைத்து வழங்குவது தொன்று தொட்ட வழக்கமாதல் அறிக. சங்க காலச் சேரவேந்தர் இருபிரிவினராவர். ஒரு கிளையினர், தம் இயற்பெயரை அடுத்துச் சேரல், ஆதன், குட்டுவன் என்ற சிறப்புப் பெயர்களுள் யாதேனும் ஒன்றினை மேற்கொள்வர். மற்றொரு கிளையினைச் சார்ந்தார் ஒவ்வொருவரும் அச்சிறப்புப் பெயர்களோடு, "இரும்பொறை" என்ற பிறிதொரு சிறப்புப் பெயரையும் தவறாது மேற்கொள்வர். சேர அரசர் இரு கிளையினராகப் பிரிந்து வாழ்வதைப் போன்றே, அவர் ஆண்ட நாடும், இரண்டாகப் பிரிந்தே கிடந்தது. முன்னவர், வஞ்சிமா நகரம் எனப் பெயர் பூண்ட உள்நாட்டு ஊராகிய கருவூரைத் தலைநகராகக் கொண்டு உலகாண்டு வந்தனர். இரும்பொறை மரபினர், தொண்டி, மாந்தை, தறவு முதலாம் பேரூர்களைக் கொண்ட கடற்கரை