பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 புலவர் கா. கோவிந்தன்



உறு பொருள் பல சேர்த்து, உயர்ந்தே விளங்குவான். அவனுக்கு வாழ்வு ஒரு பாரமாகத் தோன்றுவது மில்லை.

அத்தகையன்பால், ஒரு நாட்டின் அரசுரிமை செல்லின், அவன் உள்ளது போதும் என அடங்கி யிராது, தன்னாட்டு வளம் வளர்தற்காம் வழிபல வகுப்பான். ஆதலின், அவன் நாடு வளம் அறுவதோ, அதனால் மக்கள் வாடுவதோ, வாடிய மக்கள் மன்னனை எதிர்த்து எழுவதோ நிகழா. மாறாக, நாட்டு வளம் வளர்தலின், நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழ்ந்து, தமக்கு அந்நல்வாழ்வு நல்கும் அரசன் நெடிது நாள் ஆள வாழ்த்துவர். அத்தகையானுக்கு அரசியல் ஒரு பாரமாகத் தோன்றாது. கோடையால் உலர்ந்து ஒடிந்து வீழ்ந்த சிறு சுள்ளியைப் போல் நனிமிக எளிமை யுடையதாம்.

ஆகவே, பிறர் உழைப்பில் பெருவாழ்வு வாழ எண்ணும் பேதையோன்பால் ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஒப்புவிக்காது, உழைத்து உறுபயன் காணும் உரவோனிடத்திலேயே ஒப்புவித்தல் வேண்டும். இவ்வாறு நலங்கிள்ளி நாடாளும் திறம் குறித்துச் சிறந்த அறவுரை நல்கினான்.

நலங்கிள்ளி கொடைத் திறமும், படைத் திறமும் உடையவன். அவன் பாடிய புறப்பாடலொன்று அவன் உள்ளத்தின் உயர்வையும், வீரத்தையும், புலமையின் சிறப்பையும் நன்குணர்த்துகின்றது.