பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
நெடுஞ்செழியன்

பாண்டிய அரசர்களுள், நெடுஞ்செழியன் என்ற பெயருடையார் பலராவர். நம்பி நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பெயர்களை நோக்குங்கள். அறம் உரைத்த நம் நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என அழைக்கப் பெற்றுள்ளான்.

வெற்றிவேற் செழியன் என்ற பெயர் பூண்ட மகன் கொற்கையில் இருந்து துணைபுரிய, கோப்பெருந்தேவி யார் எனும் பெயருடையளாய, மாண்புமிக்க மனைவி யார் உடனிருக்க, நெடுஞ்செழியன், மதுரையைத் தலைநகராகக் கொண்டு, நாடாண்டிருந்தான். நெடுஞ்செழியன் நீதி தவறா நெறியுடையான்; அறம் தவறாவாறு ஆட்சிபுரியும் அரசியல் முறை அறிந்தவன். அவன் நாட்டில், அந்தணர் வீதிகளில் எழும் அருமறை ஒலி கேட்குமே யல்லது, வலியரால் நலிவெய்தி முறை வேண்டி வந்தாரும், வறுமையால் வாடிக் குறை கூற வந்தாரும், தாம் வந்ததை வேந்தனுக்கு அறிவிப்பான் வேண்டியடிக்கும் மணியொலி என்றுமே கேளாது. முறை கெடாவாறும், குறை நேராவாறும் நின்று