பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 87



சென்று விட்டது. இடையே நடந்தன அறியாத நெடுஞ்செழியன் அரண்மனையில் மனைவியின் ஊடல் போக்கி உவந்திருந்தான்.

கணவனைக் கள்வன் எனக் கூறிக் கொலை செய்து விட்டனர் என்பதைக் கண்ணகி அறிந்தாள்; கண்ணிர் விட்டுக் கலங்கினாள்; கடுந்துயர் உற்றாள்; ஓடினாள், ஒடிக் கணவனைக் கண்டாள்; கண்ட அக்கணமே கணவன் கள்வனல்லன் என்பதை நாடறியச் செய்ய வேண்டிய கடமை காத்திருப்பது உணர்ந்தாள். உடனே அரசன் கோயிலை விரைந்து அடைந்தாள், வாயிற்காவலன் வழியே, வருகையினை அவனுக்கு உணர்த்தினாள்.

யார் எந்நேரத்தில் வரினும், அவரை வரவேற்று அவர் குறைகேட்டு முறை செய்யும் கோலுடையனாய நெடுஞ்செழியன், கண்ண்கியை அழைத்து வருமாறு காவலனைப் பணித்தான். எஞ்சிய ஒற்றைச் சிலம்பு கையிற் கிடக்க, கண்களில் நீர் ஒழுக வந்து நின்றாள் கண்ணகி. கண்ணிர் ஒழுக நின்ற கண்ணகியைக் கண்டவுடனே கலங்கினான் காவலன். அவன் கண்களுக்கு, அவள் கண்ணிரே முதற்கண் தோன்றிற்று. ஆகவே, “நீ யார்? யாது நின் குறை?” என வினவினான். அது கேட்ட கண்ணகி, “காவல! புகார், யான் பிறந்த ஊர். என் காற்சிலம்பை விற்றற் பொருட்டு வந்து, நின்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயர்” என உரைத்தாள். கோவலன் கள்வனே; அவன்பால் இருந்தது, அரசியார்