பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 89

பழிச்சொல், பகைவர் செவிகளுள் சென்று புகாமுன்னரே, வளைந்த செங்கோலை, வீழ்ந்து உயிர்விட்டு நிமிர்த்திய நெடுஞ்செழியன் பெருமையே பெருமை! அம்மட்டோ மன்னன் மாண்டான் என்பதை அறிந்த மாதேவியாரும், கணவன் இறக்க உயிர் வாழேன் எனும் கருத்துடையராய், அரசன் வீழ்ந்த அவ்வரியணை மீதே தாமும் வீழ்ந்து உயிர் துறந்தார். என்னே கணவன் மனைவியர்தம் காதல் வாழ்வு: நெடுஞ்செழியன் நெறி தவறான்; நெறிதவறின் உயிர் வாழான். இவ்வாறு, தன் அறியாமையால் அழிந்த அறத்தினைத் தன் உயிர் கொடுத்து உயிர்ப்பிக்கும் உரவோனாதல் அறிந்தன்றோ, அவன் பகை வேந்தனாய சேரன் செங்குட்டுவன்,

     “வல்வினை வளைத்த கோலை மன்னவன்
      செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது”

எனக் கூறிச் சிறப்பித்தான்!

உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட உயர்ந் தோனாய நெடுஞ்செழியன், இறவாது நாடாண்டிருந்த காலத்தே நாட்டு மக்கட்கு நல்கிய நல்லுரை, நாவாரப் பாராட்டும் பெருமை வாய்ந்தது.

ஒரு நாடு நல்லாட்சி பெற்ற நாடாய், நனி சிறந்து விளங்க வேண்டுமாயின், அந்நாடு, ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பலரைத் தன்பால் கொண்டிருத்தல் வேண்டும். நாட்டில் சான்றோர். பலர் தோன்ற வேண்டுமாயின், கல்வியில் நாட்டம் உடையார் மிகப் பலராதல் வேண்டும்; அதற்குக் கல்வியின் சிறப்பும்,