பக்கம்:இலக்கியச் சாறு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனனுரை பதினெண்கட்டுரைகள் கொண்ட இந்நூல் ‘இலக்கியச் சாறு’ என்ற இனிய புதிய பெயர்த் தலைப்பினைப் பெறுகின்றது. இது மிகப் புதிய தொடரன்று. கருப்பஞ்சாறு என்ற வழக்கினை நாம் பலகால் கேட்டிருக்கின்றோம். பழச் சாற்றுக்கடைகள் எங்கும் பெருகி வரும் காலம் இது. சாறு என்பதற்குச் செறிவு என்பது பொருள். 'சாறயர்களம்' எனவும் சாறுதலைக் கொண்டேன்’ எனவும் வேறு வேறு கடவுளர் சாறு சிறந்தொருபால்’ எனவும் விழா என்ற பொருளில் இச்சொல் சங்க காலத்துப் பெருவழக்காக இருந்தது. மக்கள் செறிவாகக் கூடிய நெருக்கம் என்பது இதன் கருத்து. சாறு என்பதற்குச் சத்தின் பிழிவு என்ற பொருளும் உண்டு. ஆலைச்சாறு பாய் ஒதை’ என்பர் கம்பர். 'திருந்து சாறு அடுவுழிப் பிறந்த தீம்புகை' என்பர் திருத்தக்க தேவர். அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தாற் பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த சாறுபோற் சாலவும் பயனுதவி மற்றதன் கோதுபோற் போகும் உடம்பு என்ற நாலடியில் கரும்பின் பிழிவு சாறெனவும் அதன் சக்கை கோதெனவும் குறிக்கப்படுதல் காண்க. 'நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்’ என்ற புறநானூறும் நினையத்தகும். எனவே இலக்கியச் சாறு என்ற சொற்றொடருக்கு இலக்கியப் பிழிவு என்பது கருத்தாம். இரும்பனையின் குரும்பை நீரும் பூங்கரும்பின் தீஞ்சாறும் ஓங்குமணற் குவவுத் தாழை தீநீரோ டுடன்விரா அய் முந்நீருண்டு முந்நீர்ப் பாவும் தாங்கா வுறையுள் நல்லூர் என்ற மாங்குடிகிழார் புறநானூற்றுச் செய்யுளால், பனைநுங்கின் நீர், கரும்பின் தேறல், தென்னை இளநீர் மூன்றும் விரவிய கலவைச் சாறு குடித்த பழக்கம் பண்டைக்காலத்து இருந்ததை அறியலாம். தனிப் பழச் சாற்றோடு பல்வகைப் பழங்கள் பிழிந்த கலப்புச்சாறும் இன்று கடைகளில் கிடைக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/10&oldid=751324" இலிருந்து மீள்விக்கப்பட்டது