பக்கம்:இலக்கியச் சாறு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச்சாறு என்ற இந்நூல் பல இலக்கியங்களின் பிழிவாகும். திருவாசகம், திருக்கோவை, கோவையிலக்கியம், திருப்பாவை, திருவெம்பாவை, தைப்பாவைகள். பல சிற்றிலக்கியங்கள், தாயுமானவர் கவிதை, காந்திக் கவிதை, பாரதி கவிதை என்ற இலக்கிய வகைகளை ஒவ்வோர் கூறுபற்றி வடித்தெடுத்த கருத்துச் சாறுகளை இத்தொகுப்பிற் காணலாம். இடைநூற்றாண்டு இலக்கியங்களும் இந்நூற்றாண்டு இலக்கியங்களும் மரபுச்சுடர் குன்றாமல் புத்தொளி நந்தாமல் திறப்பாடு செய்யப்பட்டுள. தற்சிறுமை, தேவர்கள் படும்பாடு, காந்திக்கவிதை, பாரதீயம் என்றினைய கட்டுரைச் சாறுகள் அறிவு மறுமலர்ச்சியைப் பண்படுத்தும் என்று நம்புகின்றேன். படைப்பிலக்கியப் பாங்கு என்ற முதற்சாறு கவர்ச்சி கருதிப் பெண்ணினத்தின் பெருமை மாசு படக்கூடாது என்ற நோக்கில் பிழியப் பெற்றது. தமிழ்ச் சொல்லாட்சியும் தமிழ்மையாகப் போற்றப்படவேண்டும் எனவும் தமிழாற்றலை அயல்மாசு படுத்தலாகாது எனவும் இக் கட்டுரை தெளிவுபடுத்துகின்றது. புதினம், சிறுகதை, நாடகம் படைக்கும் புத்தெழுத்தாளர்கள் பொருண்மையிலும் சொன்மையிலும் மக்கள் நலங்களையே நயத்தக்க நாகரிகச் சால்போடு கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், தங்கள் மறுபதிப்புக்களை மொழித் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதும் இக்கட்டுரையின் சாறாகும். பழமைக்குள் மூழ்கினாலும் புதுமைமேல் நீந்தினாலும், நாட்டின் எதிர்கால முன்னேற்றமும் நிகழ்கால நல்வாழ்வுமே என் எழுத்துக்களின் உள்ளொளி. என் எனைவகை நூல்களிலும் இவ்வொளிக்கதிர் பிறங்கக் காணலாம். என் நூல்களை வரிசைப் பதிப்பாக்கித் தமிழ்மக்கட்கு வழங்கவேண்டும் என்று திட்டப்படுத்தினார் பதிப்புச் செம்மல் மெய்யப்பனார். அவர் எண்ணியாங்கு பட்டுத் துகில்போலக் குறுகிய காலத்தில் என் பனுவல்கள் அச்சிழை பெற்றுக் கண்கவர் வனப்போடு வந்து கொண்டிருக்கின்றன. தன் குழந்தை வரிசை வரிசையாகப் பரிசு வாங்கும்போது மகிழும் தாயுணர்வை நான் பெறுகின்றேன். மணிவாசகர் பதிப்பகத்தார்க்கு என் வாழ்த்தும் நன்றியும் உரிய, வ.சுப. மாணிக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/11&oldid=751325" இலிருந்து மீள்விக்கப்பட்டது