பக்கம்:இலக்கியச் சாறு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இலக்கியச் சாறு
1. படைப்பிலக்கியப் பாங்கு

பல்வேறு கலைத்துறைகளில் தமிழ்ச் செல்வத்தை இன்று வகைவகையாகப் பெருக்கி வரும் எழுது குலத்தோராகிய நாம் குழுமியிருக்கும் அண்ணாமலைநகர், தமிழ் மன்னர் என்று புலவர் உலகம் புகழ்ந்த அண்ணாமலையரசரின் பெயரைத் தாங்கிய கல்வித்தலமாகும்; அரசர் முத்தையவேள் போற்றி வளர்த்த தமிழ்ப்பண்ணையும் ஆகும். ஏனைப் பல்கலைக் கழகங்கள் போலாது தமிழியக்கமும் தமிழிசையியக்கமும் கண்ட புரட்சிக் கழகம் இது. இங்குத் தமிழ்த்துறையில் பேராசிரியராக வீற்றிருந்த விபூலானந்த அடிகள், கா.சு. பிள்ளை, நாவலர் பாரதியார், நாவலர் நாட்டார், பண்டிதமணி கதிரேசனார், மகாவித்துவான் இராகவையங்கார், தெ.பொ.மீ. முதலானோர் தமிழிலக்கிய வரலாற்றில் சீரிடம் பெற்ற புலமைத் தோன்றல்கள்.

இங்ஙனம் பன்மானும் தமிழ் மணங்கமழும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய இணை வேந்தரும் புதிய துணைவேந்தரும் தமிழ் மன்பதைக்கு எழுத்து விருந்து படைக்கும் நம்மைச் சோழபாண்டியர் போல ஒரு சேர இருந்துவரவேற்று ஐயடுக்குவளமனைபோலவிருந்தோம்புவது எழுத்தாளர் மாநாட்டிற்கு உள்ளாக்கமும் புறவூக்கமும் ஆம். இப்பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவனாய் அறிவொளி பெற்றுத் தமிழ்த்துறைப் பேராசிரியனாய் நிறைபணி செய்து பொன்விழாவின் மூதறிஞனாய் உயர்பேறு பெற்ற நான் குறள் சொல்லும் நன்றியுணர்வொடு என் முதன்மையுரையைத் தொடங்குகின்றேன்.


தமிழ் எழுத்தாளர் மாநாடு, பொது முதன்மையுரை - அண்ணாமலைநகர் 23-3-1987.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/13&oldid=509730" இலிருந்து மீள்விக்கப்பட்டது