பக்கம்:இலக்கியச் சாறு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 439

அக்காள்-நக்காள் என வரும் உறவு மொழிகளை நாம் நாள்தோறும் சொல்லுகின்றோம், கேட்கின்றோம். நகர முதல் மெய் இவ்விடங்களில் வரும். நாத்தாள்-என்ஆத்தாள் என்பது பொருள். நாச்சி-என் ஆச்சி என்பது பொருள். இவ்வகையிற் பார்க்குங்கால்,இடைக்குலத்துக்கு உரிய ஆய்ச்சியார் என்பது நாச்சியார் என வந்ததாகக் கொள்ள வேண்டும். நெருங்கிய பிணைப்பைக் காட்டுவதற்கு, நம்மாழ்வார் நம்பிள்ளை நஞ்சீயர் எனவரும் மரபுகளையும் சேர்த்து கொள்க. எனவே நாச்சியார் திருமொழி என்பது கோதை என்னும் இடைச்சியார், நம் வணக்கத்துக்குரிய ஆய்ச்சியார் பாடிய பாசுரம் எனப் பொருள்படும். ஆர் என்பது சிறப்பு விகுதி.

முதற்கண் கூறியபடி, திருப்பாவை சங்கத் தமிழ்ச்

சாயலுடையது. தொல்காப்பியம் மாயோனை முல்லை நிலக் கடவுளாகக் காட்டும். 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” எனவும், 'மாமாயன் மாதவன்’ எனவும் திருப்பாவை பாடுகின்றது. வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளற் பெரும்பசுக்கள்', 'மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்’ என வரும் பண்ணை வளம் முல்லைக்கலி கூறும் குடஞ்சுட்டினத்தைக் குறிக்கின்றது. மாமல்லபுரத்தில் பால் சொரியும் பசுவின் காட்சிச் சிற்பமும் ஒப்பாகும்.

சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையே ஆண்டாள் திருப்பாவைக்கு முன்னோடி.இளங்கோவின் தமிழ் ஆண்டாள் தமிழ் மாலையாக மலர்கின்றது. கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்' என்ற சிலம்பின் மறு வடிவமே “கன்று குணிலா எறிந்தாய்கழல்போற்றி என்ற பாவையடி"கோவலர்வாழ்க்கை ஓர் கொடும்பாடில்லை என்ற சிலம்பின் கருத்தே, “குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே என்ற பாவைத் தொடராயிற்று. இங்ஙனம் தொன்னூற் சுவடும் முல்லைப் பின்புலமும் ஆய்ச்சியர் வாழ்வும் அமைந்திருத்தலின், சங்கத் தமிழ் மாலை என்று பெருமிதமாகப் பெயர் கொடுத்தார் கோதையார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியும் சங்கத் தமிழ் என்ற தொடராட்சிக்கு இத்திருப்பாவைத் தொடரை மேற்கோள் காட்டியுள்ளது. மு. இராகவையங்கார், வை.மு.கிருட்டிணமாச்சாரியார் என்ற வைணவப் புலமைப் பெருமக்கள் இவ்வகராதியின் உறுப்பினர்கள் என்பது நினையத்தகும்.