பக்கம்:இலக்கியச் சாறு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

வ.சுப. மாணிக்கனார்



ஆணிலே பெண்ணிலே என்போல் ஒருபேதை அனைத் துலகிலும் உண்டா? ஆடவர் வடிவு பெற்றுள்ளேனே யன்றிக் கனவிலும் ஆண்மைப்பொருள் இல்லேனே? நான் இதுவரை கற்றதும் கேட்டதும் எல்லாம் மனம் போன போக்கிலே போகவிட்டுப் பொய்யனாகவும் கடைப் புலையனாகவும் ஆகிவிட்டேனே? பகற்பொழுதிலே கண்ணை மூடிக்கொண்டு பொய்த்துயில் கொள்பவனை எழுப்ப முடியுமோ? மருந்துக்காவது ஒர் உண்மை சொன்னது உண்டா? ஈகை இரக்கம் என்பன என்பிறப்பில் என்றைக்காவது இருந்த சுவடு உண்டா? பிறருக்குப்போதிப்பது தவிர நான் செய்தது உண்டா? போதிப்பதை நிறுத்திச் சும்மாவும் இருந்திலேனே! என்னைப் போல் குணக்கேடனை யாரும் கண்டோ கேட்டோ இருக்கமாட்டார். என்செய்வேன்! எத்தனை விதங்கள்தான் கற்பினும் கேட்கினும் என் இதயம் ஒடுங்கிய பாடில்லை. என் கொடுமை முறையற்ற கொடுமை, தீய கொடுமை. இதனை யாரிடம் சொல்வேன்? கேட்பவர் யார்?

வாடித் திரிந்துநான் கற்றதும் கேட்டதும், அவலமாய்ப் போதல் நன்றோ

என இவ்வாறெல்லாம் பன்னிப் புலம்பி நெஞ்சொடு போராடுவர் அடிகள். -

மதயானையை வணக்கலாம், கரடி புலிகளின் வாயைக் கட்டலாம். சிங்க முதுகின் மேல் ஏறியிருந்தது செலுத்தலாம், படம் எடுக்கும் பாம்பைக் கையிற் பிடித்து ஆட்டலாம், உலோகங்களைப் பொன்னாக்கலாம், ஒருவரும் காணாமல் உலகத்துத் திரியலாம், தேவரையும் ஏவல் கொள்ளலாம், என்றும் இளமையோடு இருக்கலாம், கூடுவிட்டுக் கூடு பாயலாம், நீர்மேல் நடக்கலாம், நெருப்பின் மேல் இருக்கலாம். இங்ஙனம் எத்தனையோ சித்தி விளையாட்டுக் களைச் செய்பவர்கட்குச் சிந்தையையும் அடக்கலாம் என்ற இன்னொன்று செய்ய முடியுமா? சித்தியிற் பெரிது சிந்தையை அடக்குதல், சித்தத்தை அடக்குவது தானே மெய்யான சித்தி!