பக்கம்:இலக்கியச் சாறு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 143

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

திறமரிது சத்தாகியென் சித்தமிசைக் குடிகொண்ட அறிவான தெய்வமே

தேசோ மயானந்தமே (தேசோ.9)

என்று சிந்தையடக்கம் அடக்கங்களுள் அரியது என உறழ்மை காட்டி விளக்குவர் அடிகளார். ஆடாமல் ஒய்ந்திட்ட பம்பரம்போல் விசையடங்கி மனம் வீழவேண்டும் என்பது இவர் வாழ்வின் நோக்கம். ஆனால் நிலை என்ன? தான் இறைவனோடு இரண்டறக் கலப்பதற்கு இடையூறாக நிற்பது எது? தன் மனமே தன் மேல்வாழ்விற்குக் குறுக்கீடு எனவும், உட்பகையாய் உடனாக இருந்து கேடு செய்வது மனமே எனவும் கண்டார். என்றுமில்லாத சினங்கொண்டார் அடிகள். இருவகைச்சினம்

சினம் என்ற சொல்லைக் கேட்டவுடன் அது தீது என எண்ணி விடவேண்டா. அகப்பொருளில் களவு என்ற ஒரு கைகோள் உண்டு. இவ்வின்பக் களவினைக் குற்றம் எனக் கொள்வதில்லை. அன்போடும் அறத்தொடும் கூடிய கள வொழுக்கமாகவே அதனைக் கருதுகின்றோம்.இக்களவினைப் பாடிய சங்கப் புலவோர் சான்றோர் எனப்படுவர். திருக்குறள் 'அறஞ்சாரா நல்குரவு (வறுமை) என்று கூறுவதிலிருந்து அறஞ்சார்ந்த நல்குரவும் ஒன்று உண்டு என்பதும், வறுமை இருவகைப்படும் என்பதும் அறியத்தகும். அதுபோல் சினத்தையும் பண்படுத்தும் சினம் எனவும் புண்படுத்தும் சினம் எனவும் இருவகைப்படுத்தலாம். கற்பாக முடியும் களவு போற்றப்பெறுவது போல, கொடையால் வரும் வறுமை புகழப் பெறுவதுபோல மனத்தை இடித்துரைக்கும் சினமும் வரவேற்புக்கு உரியது. தம்மனம் அடங்காது உணர்ச்சி வாய்ப்படும்போது அதனைக் கடிந்து முனியும் காரணத்தால் அன்றோ முனிவர்கள் என்ற பெயர் தவத்தோர்கட்கு வந்தது. ஆதலின் தாயுமானவர்க்கு எழுந்த சினம் தவச்சினமே யன்றி அவச்சினம் அன்று. அச்சினத்தின் ஆற்றலையும் அதனை வெளிப்படுத்தும் இவர் வேகச் சொற்களையும் காண்போம்.