பக்கம்:இலக்கியச் சாறு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியச் சாறு

15



கோட்படா என்று தொல்காப்பியர் பண்டே தனியுடைமைத் தன்மையைக் குறிப்பர்.

நூல்கள் முதலான எழுத்துடைமைகளோ எழுத்தாளி மறைந்த ஐம்பதாண்டுக்குப்பின் உலகவுடைமைகள் ஆகிவிடுகின்றன. யார்வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம். இதனை நான் குறிப்பதன் கருத்து பொதுவுடைமைப் பொருளைப் படைக்கும் எழுத்துச் சான்றோர்கள் இவ்வுலகில் வாழுங்காலத்துத் தரவாழ்வு வாழ வேண்டும் என்பதேயாம். தமிழ் வளம் பெருக்கும் எழுத்தாண்மையர் தாமும் வளமாக வாழ வேண்டும் என்பது ஆசையன்று, அழுக்காறன்று; உரிமையுணர்வாகும்.

காதல் நடப்பியல்

புதினம் நாடகம் சிறுகதை உரைநடை திறனியல் முறைக்கவிதை புதுக்கவிதை இலக்கணம் அறிவியல் இதழியல் பதிப்பியல் நாட்டுப்பாடல் திரைப்பாடல் வானொலி தொலைக்காட்சி எனப் பலமுறை சார்ந்த எழுத்தாளர்கள் இம் மாநாட்டுக் கருத்தரங்கிற் கலந்து கொள்கின்றீர்கள். இவற்றின் முன்னோடிகள், தன்மைகள், வரலாறுகள், வளர்ச்சிகள், தாக்கங்கள் எல்லாம் நான் சொல்ல வரவில்லை. நாழிகைக்கடையில் மணி பார்க்கலாமா? ஆதலின் என் பொதுமையுரைக்கண் எதிர் கால வளர்ச்சி நோக்கில் நம் இலக்கியப்படைப்பின் சில குறைகளை முறைகளை நிறைகளைச் சுட்டிக் காட்டுவேன்.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

என்பர் திருவள்ளுவர். மன்னாயத்தின் குறைபாடுகளை இளிவரல்களை இழிவுகளை மறை நிலைகளை நெற்றி வடுப்போல எடுத்து விளம்பும் எழுத்தாளர்கள், தங்கள் எழுத்துக் குறைகளையும் மறித்துப் பார்ப்பது நற்சிந்தனை யாகும். பல படிகள் விற்பனைக்காகச் சந்தை நோக்கில், பாலுறவுக் கீழ்மைகளையும் காமச் சாக்கடைகளையும் இறக்குமதி உளவியல்களையும் கோணற் சூழ்நிலைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/17&oldid=509737" இலிருந்து மீள்விக்கப்பட்டது