பக்கம்:இலக்கியச் சாறு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 173

கூறக் கேட்டிருக்கின்றேன். பாட்டுக்கு ஒரு வித்தகன் என்றோ வேந்தன் என்றோ கூறாது. ‘பாட்டுக்கு ஒரு புலவன்’ என்று கவிமணி பாடிய புலமைத் தொடரை நினைமின். ஆதலின், மேலெழுந்த வாரி பாரதிகவியைப் படிப்பவர்கள் கவியுளம் காணமாட்டார்கள் என்பது சொல்லவும் வேண்டுமோ? பன்னுரற்பயிற்சி

புலமைத்திறம் பெறுதற்குப் பன்னூற் பயிற்சி இன்றியமையாத அடிப்படையாகும். இராமாயணம், திருக்குறள், சிலப்பதிகார ஆசிரியர்களைப் பலவிடத்தும் போற்றிக் கூறுவதால், அன்னோர் பெருநூல்களில் மனந்தோய்ந்தவர் பாரதியார் என்பது தானே விளங்கும். எனினும், பாரதி கற்ற தமிழ் நூல்கள் இவ்வளவே என்று சிலர் அறியாது நம்புகின்றனர். யாதும் தமிழ் முகம் பாராத் தமிழர் சிறந்த இம் மும்முகங்களையாவது பார்க்கட்டும்; படிக்கட்டும்: எடுத்த தமிழ்ப் பிறப்பில் பயன்பெறட்டும் என்று ஒரு வழி காட்டினாராகவே, மூவர் புகழ்ச்சியைக் கருதவேண்டும். பாரதியார் ஆரியம்,ஆங்கிலம், பிரெஞ்சு முதலாயமொழிகளில் இலக்கியங்களைக் கற்றவர்; காளிதாசனையும் சாகுந்தலத்தையும் அருமையான முறையில் போற்றிச் சொல்லுகின்றார்.பல்கலைபலதுறைப் பயிற்சிஅவர்க்கு உண்டு. உலக வரலாறும் தமிழ்நாட்டு வரலாறும் தமிழ்மொழி வரலாறும் அவர் அறிந்தனவே. -

பாரதியார் தமிழ்நூற்கல்வி பெரியது. ஐவகை இலக்கணங்களையும் முறையாகக் கற்றவர். சந்தி பிரித்தெழுவது அவர் வழக்கமில்லை. தொடரிலக்கண முறைப்படிதான் சொற்கனை உரைநடையிலும் தொடுத்து எழுதக் காண்கின்றோம். சீர்தோன்றப் பாடல்களை எழுதியிருக்கும் அவர்தம் கையெழுத்துப் படிகளே யாப்புப் பயிற்சிக்குச் சான்றுகள். பாவும் பாவினமும் எல்லாம் செய்யுளியல் குன்றாதும் இசை குன்றாதும் பாடவல்லவர் பாரதியார். இஃது உண்மையென்று சொல்ல நினைப்பதே நகைப்பிற் கிடமாகுமெனின், சான்று காட்டல் என்னாம்?