பக்கம்:இலக்கியச் சாறு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

வ.சுப. மாணிக்கனார்



பச்சைக் கொச்சைச் சொற்களால் எழுதுகின்றார்கள்; எதுவும் எதிர்த்துக் கேட்டால் நடப்பியல் என்னும் யதார்த்தத்தைத் தானே எடுத்துக் காட்டுகின்றோம் என ஒரே சங்கினை ஊதுகின்றனர். இஃது எழுத்தாளர் பற்றிப் பரவலாகக் கூறப்பட்டுவரும் குறை.

வேறுபட்டகாதலிணைவுகளைக் கதையாக்கிய கு.ப.இரா. 'பச்சையாக இருந்தால் எழுத்தாளன் குற்றமன்று.ஆண் பெண் உறவு இப்பொழுது நிலவி வரும் முறையின் குற்றம். உண்மையை மறைப்பது கலையாகாது. கீறி ஆற்றுவதே சிறந்த வைத்தியம்’ என்று காரணம் கூறுவர். இக்கருத்து கொள்கையளவில் பலர்க்கு உடன்பாடு என்று சொல்ல வியலாவிட்டாலும், பலர்தம் எழுத்தோட்டம் இவ்வாறாகத் தான் செல்கின்றது. புதுக்கவிதைக்குப் பரவலாக, அறையப்படும் குறைகளுள் பெரிது பச்சையான சிவப்பு வருணனையாகும்.

'இந்தப் பச்சை நோட்டுக்களுக்கு நாட்டில்
எத்தனையோ சிவப்பு விளக்குகள் எரிகின்றன;
நீலப்படங்கள் விரிகின்றன; மஞ்சள் பத்திரிகைகள்
பிறக்கின்றன. ஆனால் இதற்குப் பிடித்த நிறம்
என்னவோ கறுப்புத்தான்.'

புதுக்கவிதையோட்டம் உடைய இந்நடைஓரளவுநாகரிக நடைத்து. எங்கே போகின்றோம்’ என்ற புதினத்தார் 'பரபரப்புச் செய்தி, சினிமாசிங்காரக்கவர்ச்சி, ஆண் பெண் அந்தரங்கச்சதை விவகார வெளியாட்டங்கள் இவையெல்லாம் நாள்தோறும் வாரந்தோறும் மக்களிடம் பரப்பப்படுகின்றன’ என்று கவலைக் கொதிப்புற்றாலும், என்ன செய்ய முடிகின்றது! வேசித்தனத்தால் தன் உடல் மூலதனமாகப் பொருள்குவிக்கும் ஒரு பெண்ணைத்தான் புதினத் தலைவியாக்க வேண்டிய காலமாக இருக்கிறது.

'கலையும் பெண்ணும்' என்ற பிச்சை மூர்த்தியின் கதையில் நிருமாணவடிவில் ஒவியம் எழுதுவதற்குக் கண்ணிழந்த சுசிலாவை ஒவியன் குமரன் மணந்தான். ஒவியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/18&oldid=509738" இலிருந்து மீள்விக்கப்பட்டது