பக்கம்:இலக்கியச் சாறு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியச் சாறு

21



ஒரு புதுப்போக்கை உறுதிப் படுத்துவதற்குச் சில நல்லெழுத்தாளர்கள் எழுத்து முனைப்படுவதையும் காண்கின்றோம்.

‘சாப விமோசனம்’ என்ற புதுமைப்பித்தன் கதையில், அகலிகை சீதை உரையாடலில், என்னைக் கல்லினின்று உய்வித்த இராமனா உன்னை ஐயப்பட்டுத் தீப்புகச் செய்தான் என்று ஆத்திரமாகக் கேட்கின்றாள் அகலிகை. உலகத்துக்கு மெய்ப்பிக்க வேண்டாமா? என்பது சீதையின் அமைதியான மறுமொழி. இம் மறுமொழி பாரத மன்னாயத்தின் கொடுபோக்குக்கு நல்ல எடுத்துக்காட்டு. இல்லறப் பெண்களை ஐயமாகக் களப்படுத்துவது இராமாயண பாரத இலியத்து இதிகாசங்களின் ஆரிய வழக்கு பரத்தை குலத்திற் பிறந்த மாதவிகூடக் கோவலன் தன்னை ஐயப்படுவதைப் பொறுக்க முடியவில்லை என்று சிலப்பதிகாரம் புலப்படுத்தும். இது தமிழ் வழக்கு. ‘விடிந்தது’ என்ற பெயரால் அண்மையில் வந்த கதையில்,சிங்கப்பூர்க்கணவன்,வீட்டில் வேறு வகையான சுருட்டுக் கிடந்ததைக் கண்டு ஐயப்பட்டு மனைவி வள்ளியைக் கொன்றான் எனவும் பின்பு உண்மை தெரிந்து வருந்தினான் எனவும் முடிகின்றது. சிசிலி மன்னன் இலியாந்தசு தன் வேண்டுகோளை மறுத்த நண்பன் பாலச் சென்சு தன் மனைவி எருமியான் வேண்டுகோட்கு இசைந்து விருந்தினனாக மேலும் நீடித்ததைத் தவறாகவுணர்ந்து அவள்மேல் ஐயப்பட்டுப் பெருங்கொடுமை செய்தான் என்பதுவே செகப்பிரியரின் மாரிக்காலக் கதையின் காரணமாகும். அண்ணாமலை நகரில் முன்பு நடந்த ஓர் அவலச் செய்தி: மகப்பேறு கேட்க வந்த நண்பன் தன் நண்பனைப் பார்த்து , இக்குழந்தை உன் மாதிரியில்லையே என்று இயல்பாகத்தான் சொன்னான்.அது அவன் மனத்தில் சுருக்கெனத் தைத்தது. மனைவி மேல் உடனே ஐயப்பட்டுத் தன் மானத்தைப் பெருக்கிக் கொண்டு கிணற்றில் விழுந்து மாண்டான். எவ்வளவு பேதை வேகம். மனைவியை எளிதாக ஐயப்படுவதும் ஐயம் தோன்றினால் அதனையே முடிவாகச் சிந்தனை செய்வதும் கொலை அல்லது தற்கொலைப்படுவதும் இந்த நாட்டின் இழிந்த மரபாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/23&oldid=982840" இலிருந்து மீள்விக்கப்பட்டது