பக்கம்:இலக்கியச் சாறு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியச் சாறு

27



வேண்டியவர்கள் குழுமி வந்திருக்கும் வாய்ப்பை நழுவவிடலாமா? இம்மாநாடு கூடுதற்கு அரியது; அதே நேரத்தில் தமிழ் உய்தற்கும் உரியதல்லவா? சிந்தியுங்கள் என்பதுவே என் வேண்டுகோள்.

    புதினம் சிறுகதை நாடகம் முதலிய எழுத்துப் பெருமக்களிடம் வளர்ந்து வரும் மொழிக்குறை யாது? கண்ட சொற்களையெல்லாம் தமிழெழுத்து வடிவில் எழுதிவிடுவதனால் தமிழ்மொழியாகி விடாது. இந்நூல் எம் மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதே சில நூல்களுக்கு மயக்கமாகின்றது. 20 முதல் 70 விழுக்காடு வரை ஆங்கில முதலான கலப்புக் காணலாம். ஆங்கிலத்தில் தமிழ் கலந்துள்ளதா? தமிழில் ஆங்கிலம் கலந்துள்ளதா? எந்த மொழி? என நகையாடத் தோன்றகின்றது. உருபுகள் வினையீறுகள்தாம் தமிழ் போலவுள.
   பஞ்சபூதங்களின் நுட்பங்கள் கூறும் அறிவியல்களைச் சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை என்பது கேட்டுக் கொதித்தார் பாரதியார். புதினங்கள் சிறுகதை நாடகம் புதுக்கவிதை யெல்லாம் அறிவியலா? அகத்திணை யிலக்கியமும் பெருங்காப்பியங்களும் படைத்த தமிழ் மொழிக்கண் குடும்ப உறவுகளையும் காதலுணர்வுகளையும் சொல்லுதற்குக் கூடவா கிளவிகள் இல்லை? அலுவலகப் பெண்கள் உரையாடல், மருத்துவர் உரையாடல், கல்லூரி மாணவ மாணவியர் உரையாடல்; களவுக் காதலர் காதலிகள் உரையாடல் என்றால் அப்பகுதியெல்லாம் ஆங்கிலமாகத்தான் இருக்கவேண்டுமோ? தமிழாக இருந்தால் யதார்த்தம் ஆகாது என்று ஒரு புது மாயையை அடிக்கடி சொல்லக் கேட்கின்றோம். அப்படியானால் அவற்றை ஒரு நூலாக வடிப்பதுங்கூட யதார்த்தமில்லை என்று சொல்லலாம். அத்தகைய பகுதிகளை ஆங்கில் எழுத்தால் எழுதுவதுதான் யதார்த்தம் என்று சொல்லவேண்டும். இவ்வுரையாடல்களையும் இடையிடையே வரும் ஆங்கிலச் சொற்களையும் ஆங்கில எழுத்தாலே எழுதுங்கள். உண்மை வெளிச்சமாகும். ஏன், இத்தகைய புதின முதலியவை ஆங்கிலம் படித்த கற்றாரை