பக்கம்:இலக்கியச் சாறு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

43



ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளை ஒரு சேர இடைக்காலம் என்று வைத்துக்கொண்டிருக்கின்றோமே; பொருந்துமா? இது மறுசிந்தனைக்கு உரியது. ஆங்கிலம் செருமனி போன்ற மேனாட்டு உலக மொழிகள் கிறித்துவுக்குப் பல நூற்றாண்டுக்குப் பின்னரே இலக்கியங்கள் பெற்றவை. இம் மொழிகளும் பண்டை, இடை, இற்றை எனக் காலப்பாகுபாடு செய்துள்ளன. அவற்றின் இடைக்காலம் இருநூறாண்டு, முந்நூறாண்டு அளவினதே. இந்திய நாட்டு மொழிகளிற் பல, சில நூற்றாண்டுகளாகவே, இலக்கியம் உடையவை. ஒரு சில மொழிகளின் இலக்கியத் தோற்றம் மிக அண்மையது. உழக்குக்குள் கிழக்கு மேற்கு என்பது போல, இவைகளும் பண்டைக்காலம் இடைக்காலம் தற்காலம் எனப் பாகுபாடு கொள்கின்றன. எவ்வளவு காலம் வரலாறிருந்தாலும் முக்காலத்துள் அடக்க வேண்டுமா?

நீண்ட நெடிய இடைக்காலம் என்பது தமிழின் தொன்மையை மறைப்பதோடு பலதுறையாக வளர்ந்த தமிழ் வளர்ச்சியையும் கற்பார்க்குத் தோன்றாவாறு மறைத்து விடுகின்றது.ஒரே நீளமாகச்சொல்வதால்,இடைக்காலத்தமிழ் வளர்ச்சி புகைவண்டிப்பாதை போல ஒரே தடமானது, வேறு வீறும் இல்லாதது என்ற தவறான கருத்து ஏற்படுகின்றது. கன்னித் தமிழ் ஆதலில் என்றும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று நகைக்கலாம். கன்னித்தமிழ், காதலுக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே காப்பியம் கண்டது என்பதனை உணர வேண்டும். தமிழ் உலக மொழியாகப் பரவியும் பரப்பியும் வரும் இக்காலத்தில், இலக்கிய வரலாறும் வரலாற்றுக் காலப்பாடுகளும் தொன்மையும் நன்மையும் துலங்கும் வகையாக அறிவியல் நெறியில் திருத்தி எழுதப்பட வேண்டும். ஏனை மொழி இலக்கிய வரலாறுகளைச் சுவடு ஒட்டித் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படுமேல், அஃது உண்மை கலக்கிய வரலாறாகவே படும்.

சங்க காலம் தமிழுக்குப் பொற்காலம், சங்க இலக்கியம் தமிழுக்குப் பொன்னிலக்கியம் என்ற கருத்து எல்லார்க்கும் உடன்பாடானவை. இடைக்கால இலக்கியத்தைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/45&oldid=551043" இலிருந்து மீள்விக்கப்பட்டது