பக்கம்:இலக்கியச் சாறு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டுப் படைப்பிலக்கியமாயினும் அறம் சார்ந்த படைப்புக் கொள்கைகளையும் காப்பிய நேர்மை களையும் இவர் இலக்கியக் கொள்கையாக உருவாக்குகிறார். இந்நூலிலுள்ள கட்டுரைகளில் சிறந்த கட்டுரை வடிவமும் வீறுமிக்க திறனாய்வுக்கொள்கைகளும் புதுமையான விளக்கங்களும் புதிய இலக்கிய அணுகுமுறைகளும் அமைந்துள்ளன. தலைப்பினாலும் பொருளாலும் கட்டுரை வன்மையாலும் வெளிப்பாட்டுத் திறனாலும் இருபதாம் நூற்றாண்டுக் கட்டுரை இலக்கியத்தில் தனி இடம்பெறும் தகைமை சான்றன. ஒரு படைப்பாளியை, ஓர் ஆய்வாளரை, ஒரு நல்லாசிரியரை, ஒரு சான்றோரை அவர் கட்டுரைகள் அனைத்தும் இனங்காட்டுகின்றன. பல்வகைக் கட்டுரைகள், பலவகை மலர்களின் பூக்குடலையாக, பல்சுவைக் கனிகளின் சாறாக அமைந்துள்ள தைக் கற்பார் எளிதில் உணர்வர் என்பது எனது உறுதியான நம்பிக்கை. ஆசிரியரின் 'தொல்காப்பியக் கடல்', 'சங்க நெறி' 'திருக் குறட் சுடர்' என்னும் மூன்று அரிய நூல்களை மணிவாசகர் பதிப்பகம் செம்பதிப்பாக வெளியிட்டது. அவற்றின் நலங்களைப் பத்திரிகைகள் பாராட்டுகின்றன. தமிழ்கூறு நல்லுலகம் தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றது. இவ்வகை நூல்களுக்குக் கிடைக்கும் வரவேற்பையும் நல்லாதரவையும் கண்டு பதிப்பகம் கழிபேருவகை கொள்கிறது. இந்நூல்களுக்கு எல்லா வகையினர், எல்லாத் தரத்தினரிடமிருந்தும் வரவேற்புக் கிடைக்கிறது. இலக்கண அறிஞர்கள், இலக்கியக் கலைஞர்கள், புலவர் பெருமக்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் இந்நூல் வரிசையைப் போற்றி, பாராட்டி மகிழ்கின்றனர். மாணிக்கனாரின் புதிய சொல்லாக்கங்கள் தமிழுக்குப் புது வரவும் தமிழுக்கு ஆக்கமும் ஆம். இந்தத் தலைமுறையில் இவரைப்போல் புதிய சொற்களைப் படைத்தவர் இலர். வாழும் சொற்களைப் படைப்பதில் வல்லவர்: பழஞ் சொல் புதுப்பிப்பதிலும் வல்லவர். இவர் படைத்த பல சொற்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பெற்று நாளும் பயன்படுத்தப் பெற்று வருவது இவரது சொல்லாக்கச் செந்நெறிக்குச் சான்றாகும். இவருடைய சொல்லாக்கங்களைச் செய்தி இதழ்களும் வானொலியும் நாளும் பயன்படுத்துவதே இவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/8&oldid=751331" இலிருந்து மீள்விக்கப்பட்டது