பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

37


கடத்திக் கொண்டுவரும் ஏழைப் பெண்ணா? இக்கேள்விக்கு வாசகன் தெளிவான விடையளிக்கும் விதத்தில் நாவலை அவர் படைத்துள்ளார்.
ராஜம்கிருஷ்ணனின் அலைவாய்க்கரையில்', 'கரிப்பு மணிகள்’ என்ற நாவல்களின் கதைக் கருக்கள் மீனவர் வாழ்க்கையையும் உப்பளத் தொழிலாளர் வாழ்க்கையையும் சித்தரிக்கின்றன. அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதில் ஏற்படக்கூடிய சிரமங்களைச் சுட்டிக் காட்டுகின்றன. இச்சிரமங்களை மீறி அவர்கள் போராட ஒன்றுகூடுவதை நாவல்கள் சித்தரிக்கின்றன.
இவை பொதுக்கருத்துக்கள். ஒரு பொதுக்கருத்து கலைப் படைப்பாக்கப்படவேண்டுமாயின் கதை மாந்தர், கதை நிகழ்ச்சிகள், அவர்கள் செயல்படும் சூழல் இவை மூலம் பொதுக் கருத்து வெளிப்படவேண்டும். கதை மாந்தர் செயல்பாட்டிற்கும் உளவியல் மாறுதல்களுக்கும் முரண்பாடு இருக்கும். இம் மாறுதல்கள் செயல்பாட்டைத் திட்டமிடுவதன்மூலம் மாற்றப்படும். உள்ளம் புற வாழ்க்கைக்கேற்ப மாறுவதும் புற வாழ்க் கையை மாற்ற உள்ளம் முயலுவதும் துணுக்கமாகக் காட்டப் படவேண்டும். இது பொதுக்கருத்தை வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும்.
பொதுக்கருத்து முழுவதும் ஒரு கலைப்படைப்பில் வெளியாக முடியாது. அதில் மிக முக்கியமான போக்கிலோ வாழ்க்கையை மாற்றுகிற முனைப்புடைய போக்கிலோ கவனம் குவிக் கப்படவேண்டும். இதனை வெளியிடக் கதைப்பின்னல் (Plot) பயன்படுத்தப்படுகிறது.
'அலைவாய்க்கரையில்' மீனவர் வாழ்க்கையின் தற்காலப் பிரச்சினைகளைத் தேர்ந்தெடுத்து அவை எச்சமூகச் சூழலில் நிகழ்கின்றன என்று காட்ட அவர்களது வாழ்க்கையின் சமூகச் சூழலை நாவலாசிரியர் சித்தரித்துக்காட்டுகிறார். இச்சமூகச் சூழலில் கதைமாந்தர்கள் செயல்படுகிறார்கள். மரபு வழியான அவர்களது துன்ப வாழ்க்கையில் புதிய அச்சம் ஒன்று தோன்றுகிறது. பணக்காரர்கள் விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கத்தொடங்குகிறார்கள். விசைப்படகினால் கட்டுமரத்தில் மீன்பிடிக்கும் தொழிலாளிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். சமயம் தங்கள் துன்பத்தைத் தீர்த்துவைக்கும் என்று நம்புகிறார்கள். நம்பிக்கை ஏமாற்றத்தில் முடிவடைகிறது. சமயத் தலைவர்கள் பற்றிய வாழ்க்கை அனுபவம் உள்ளத்தை மாற்றுகிறது. சேர்ந்து போராடி, தங்கள் வாழ்க்கையின் துன்பத்திற்குத் தீர்வுகாண முடிவுசெய்கிறார்கள். இந்நிகழ்ச்சிப் போக்கை, வேறுபட்ட கதை மாந்தர்களின் மூலமும் மன