பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

நா.வானமாமலை


மாகவும் புதுமையின் செல்வாக்கு அதிகமாக அதிகமாகத் தெளிவாகவும் தெரிகிறது.
மாறுதல்கள் ஒரே போக்காக (Stereotyped) இருப்பதில்லை. ஒரு மாறுதலையே பல்வேறு வகைகளில் கலையில் சித்தரிக்கலாம். பல்வேறு கதைப் பின்னல்களைப் படைக்கலாம். பல கலைகளில் பலவிதங்களில் வெளியிடலாம். எனவே கலை தன் வேறுபட்ட தன்மைகளையும் செழிப்பு நிலைமையையும் இழந்து வறண்டு போய்விடும் எனக் கூறுவது அறியாமையே. வாழ்க்கை எல்லையற்றது. மாறுதல்களும் எல்லையற்றவை, ஆயினும் அவை ஒருமுகப் போக்குடையவை. உலகில் நடக்கும் மாறுதல்கள் வாழ்க்கை முழுவதையும் மாற்றும் தன்மையுடையவை. இவை யாவும் ஒரு காலகட்டத்தில் ஒரே போக்குடையவை. இருபதாம் நூற்றாண்டின் வாழ்க்கை மாறுதல்களைக் குறித்து லெனின் எழுதினார்:

உலகின் மாறுதல்களனைத்தும் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான குணாம்ச மாறுதல்களின் கூறுகளே. இதுவே பொதுப் போக்கு.

சாரம் என்பது ஆயிரக்கணக்கான சமூக மாற்றங்களும் தனிமனித மாறுதல்களும், ஒரு பொதுவான மாற்றத்தின் கூறுகளே என்று காண்பதுதான்.
வாழ்க்கையின் சாரத்தை அறிவது அழகான உருவத்தில் கலைகளைப் படைக்க அவசியமானது. உள்ளடக்கத்தைப் பொருத்தமாக வெளியிடக் கலையுருவங்கள் சாதனங்களாயுள்ளன. ஆயினும் உள்ளடக்கமே கலையின் தீர்மானமான உந்து சக்தியாக உள்ளது. புதிய உள்ளடக்கம், புதிய சாரம், புதுப்புதுக் கலை வடிவங்கள் தோன்றக் காரணமாயுள்ளது. இது குறித்து பெலின்ஸ்கி என்ற ரஷியத் தத்துவாசிரியர் எழுதினார்.

ஒவ்வொரு காலகட்டமும் புதிய சிந்தனைகளை மட்டுமல்ல, புதிய கலை உருவங்களையும் தோற்றுவிக்கிறது.

உருவத்திற்கு, உள்ளடக்கத்திலிருந்து பிரிந்து தனியான வாழ்க்கையில்லை. அதன் பணி உள்ளடக்கத்தை அழகாக வெளியிடுவதற்கு உதவுவதே. படைப்புச் செயல் முறையில் உருவம் செயலூக்கத்தோடு உள்ளடக்கத்தை வெளியிடத் துணை செய்கிறது. இவையிரண்டும் சங்கமித்து ஒன்றாகாத