பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

55


கலைப்படைப்பு அழகும் சிறப்பும் வாய்ந்ததாக இராது, ஹெகல் எழுதுகிறார்:

ஒரு கலைப்படைப்பின் உள்ளடக்கம் என்பது, அதன் உருவம் உள்ளடக்கமாக மாறுவதே. உருவம் என்பது உள்ளடக்கம் உருவமாகப் பரிணமிப்பதே.

இவ்வரையறையில், இவ்விரு கூறுகளுக்குமிடையே உள்ள மிக நெருக்கமான உறவு உணர்த்தப்படுகிறது.

ஆளுமை (mastery) ஆளுமை என்ற சொல் பல்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. புற உலகை ஆராய்ந்து தனது கலைப்படைப்புக்குத் தேவையான புள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதையும் இவற்றை அழகியல் நோக்கில் பொருள் கொள்ளுவதையுமே நான் 'ஆளுமை' என்ற சொல்லின் வரையறையாகக் கொள்ளுகிறேன்.
ஒரு படைப்பாளி தனது நாவல், சிற்பம் அல்லது ஓவியத்தைப் படைக்கத் தேவையான உள்ளடக்கக் கூறுகளை உருவாக்க உலகை நோக்கி அனுபவக் கூறுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். ஜெயகாந்தன், பொன்னிலன், ராஜம் கிருஷ்ணன், செல்வராஜ், ஜானகிராமன், பார்த்தசாரதி முதலிய நாவலாசிரியர்கள் இவ்வாறு புதிய அனுபவங்களைக் கூர்ந்து நோக்குதல் மூலமாக உள்ளடக்கக் கூறுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். எந்தச் சிறந்த படைப்பாளியும் கூர்ந்து நோக்குதல் மூலமாகப் புதிய அனுபவக் கூறுகளைப் பெற்றுத் தனது கலைப்படைப்பில் இணைத்துக்கொள்ளுகிறார். பொன்னீலன் கரிசல் நிலத்தில் வாழ்ந்து பல ஊர்களுக்குச் சென்று கரிசல் நிலத்தில் மக்கள் வாழ்க்கையையும் சமூக அமைப்பையும் தனிமனிதர்களின் வாழ்க்கையில் சமூகத்தின் பாதிப்பையும் அறிந்துதான் கரிசலை எழுதினார். ராஜம் கிருஷ்ணன் கடற்கரை வாழ்க்கையை அறிய நெல்லை மாவட் டத்தின் கடற்கரைக் கிராமங்களில் வாழ்ந்து, பல மக்கள் பிரிவினரிடம் சமூக வாழ்க்கையின் தாக்கத்தை உணர்ந்து அலைவாய்க் கரையையும், கரிப்பு மணிகளையும் எழுதினார். இவ்வாறே வேறுபல ஆசிரியர்களும் தங்கள் படைப்பின் பொரு ளுக்கு அனுபவத்தின் கூறுகளைச் சேகரிக்கிறார்கள்.
நமக்கு மிகவும் பழக்கமான பொருள்கள், மனிதர்கள், சூழ்நிலை இவைபற்றித் தெளிவான மனப்பதிவுகளைப் பெற, அவர்களையும் அவற்றையும் பல கோணங்களில் உற்று நோக்குதல்