பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

வானமாமலை


அவசியம். இதற்காக எழுத்தாளன் தன்னைப் பயிற்றுவித்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும் பழக்கமான பொருள்களில் புதுமை காண, சில பக்கங்கள் அவற்றைப்பற்றி எழுதுகிறேன்” என்று அலெக்ளி எழுதினார். மனதைக் கவரும் விவரங்களை வருணனை மூலம் நமது புலன்களுக்குப் புலப்படும்படி செய்ய, தெளிவற்ற பகுதிகளைத் தெளிவான படிமங்களாக்க ஒவ்வொரு பொருளின் தனித் தன்மையையும் ஒவ்வொரு செயலின் நுணுக்கங்களையும் படைப்பாளி அறிதல் வேண்டும். நமக்குத் தெரிந்த ஒரு பொருளைப் பற்றி டால்ஸ்டாய், டாஸ்டாவெஸ்கி நாவல்களில் படிக்கும்போது இதுவரை தெரிந்ததைவிடப் புதுமையானதோர் ஒளியில் அவை நமக்குத் தோற்றமளிக்கின்றன. பல ஆண்டுகள் சேர்ந்து பழகிய ஒரு மனிதனிடம் நாம் காணாத பல புதிய இயல்புகள், உருவச் சிறப்புகள், உருவக் கோளாறுகள் ஆகியவற்றை டால்ஸ்டாய், டாஸ்டாவெஸ்கி, கார்க்கி, லாமர்ஸெட்மாம், ஹார்டி, கால்ஸ் வர்த்தி, பார்பூஸேலோலா முதலியவர்களின் நாவல்களைப் படிக்கும்போது நாம் காண்கிறோம். பழைய வஸ்துக்களின் மீது புதியப் ஒளியைப் படைப்பாளியின் அழகியல் திறன் வீசுகிறது. மனிதனது மனதின் பல்வேறுபட்ட துணுக்கமான இயக்கங்களைத் திரைப்படக் காட்சி போலச் சிறந்த கலைப் படைப்பாளிகள் படைத்துவிடுகிறார்கள் வாழ்க்கையை நாம் புரிந்துகொள்வதற்கு மேலாக, அதன் இருண்ட பகுதிகளையும் கண்ணுக்குப் புலனாகாத கூறுகளையும், இலக்கியப்படைப் பாளி நமக்குப் புலப்படச் செய்கிறான்.
முற்கால ஓவியன் இயற்கையின் உயிர்த்துடிப்பை நமக்கு உணர்த்துகிறான். தற்கால ஒவியன் இயற்கை மீது மனிதன் செயல்பாட்டையும் தனது (industrial landscaps) தொழிலியற் கைக் காட்சிகளில் வரைகிறான். முற்கால ஒவியன் இயற்கையை ரசிக்கத் தக்கதோர் பொருளாகக் கருதி ஒவியம் வரைந்தான். தற்கால ஓவியன் இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத் தன் ஓவியங்களில் சித்தரிக்கிறான். இயற்கையின் புகழ்பாடிய ஒவியன் இன்று மனிதனின் புகழைப் பாடுகிறான். இயற்கையை மனிதன் வென்று பெற்ற வெற்றிகளைக் கலையில் படைக்கிறான்.
இவை மனிதனது அனுபவப் பொதுமையின் காரணமாகத் தோன்றுகின்றன. கலைஞன் உலகைக் கூர்ந்து நோக்காமல் இத்தகைய கலைப் பொதுமைகளை உருவாக்க முடியாது.
ஆளுமை என்பது உலகை அறிந்து, புதிய போக்குகளை உணர்ந்து, அவற்றைப் பொதுமைப்படுத்தும் திறனே. எல்லாக் கலைகளுக்கும் இது தேவையே. இது உலக வரலாற்று அனு